ரியோ டி ஜெனிரோ, ஜூலை 4 – பிரேசிலில் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகள் நடக்கும் பரபரப்பான நகரமான பிலோ ஹாரிஸோனேட்டிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இன்று மேம்பாலம் ஒன்று சரிந்ததில் இரண்டு பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சரிந்த பாலத்தின் அடியில் கார், கனரகவாகனம் மற்றும் பேருந்து ஒன்று சிக்கி நசுங்கியது.
இந்த சம்பவத்தை தனது அடுக்குமாடி குடியிருப்பு வழியாக நேரில் பார்த்த 57 வயதான எல்சன் பிரிட்டோ என்பவர் கூறுகையில், “மிகப் பெரிய சத்தமும், கண்ணை மறைக்கும் அளவிற்கு தூசியும் தெரிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 19 பேர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் உலகக் கிண்ண காற்பந்தின் அரையிறுதி ஆட்டம் நடைபெறவிருக்கும் மினிராவ் மைதானத்தில் இருந்து 3 கிலோமிட்டர் தொலைவில் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: EPA