புதுடெல்லி, ஜூலை 19 – மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே பாதையில் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் மாற்றுப் பாதையில் சென்றதால், அதில் பயணம் செய்த 126 பயணிகள் உயிர் தப்பினர்.
பெர்மிங்ஹாமில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் ஏஐ113 விமானம், உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே பாதையில்தான் இயக்கப்பட்டது.
பயண நேரத்தின்படி, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது அங்கிருந்து 40 முதல் 80 கிமீ தொலைவில் இந்த விமானம் பறந்தது. சாதாரணமாக அந்த தொலைவை 5 நிமிடத்துக்குள் அடைந்து விடமுடியும்.தற்போது, உக்ரைனில் உள்நாட்டு போர் நடைபெறுவதால், இந்த பாதையில் செல்ல வேண்டாம் என்று கடந்த வாரம்தான் ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, போர் பாதிப்பு இல்லாத பகுதியின் வழியாக ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் பாதையை மாற்றியதால், அதில் பயணம் செய்த 126 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர் என ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.