Home இந்தியா சென்னையில் எழுத்துலக வேந்தன் ஜெயகாந்தனின் 80ஆம் பிறந்த நாள் விழாவும், நூல் வெளியீடும்!

சென்னையில் எழுத்துலக வேந்தன் ஜெயகாந்தனின் 80ஆம் பிறந்த நாள் விழாவும், நூல் வெளியீடும்!

589
0
SHARE
Ad

Jayakanthan writer சென்னை, ஜூலை 21 – இன்றைக்கு நம்மிடையே உலவிக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களில், நவீன தமிழ் படைப்புலகில் ஜெயகாந்தனுக்கு ஈடான ஆதிக்கமும், ஆளுமையும் கொண்ட இன்னொரு படைப்புலகச் சிற்பியைக் காண முடியாது.

சிறுகதை மன்னன் எனப் போற்றப்பட்டவர் அவர். அவருக்குப் பின்வந்த சிறுகதை படைப்பாளர்களில் பலருடைய எழுத்துக்களில் அவரது தாக்கம் இருந்தது. அதனை அவர்கள் பெருமையோடு ஒப்புக் கொள்ளவும் செய்தனர்.

நாவல் உலகிலும், சினிமா உலகிலும், கட்டுரை படைப்பாளராகவும் பல்வேறு இலக்கியத் தளங்களில் பயணித்தவர் ஜெயகாந்தன்.

#TamilSchoolmychoice

அவருக்கு தற்போது 80ஆம் அகவை நிறைவடைவதை முன்னிட்டு, ஆனந்த விகடன் வார இதழில் அவர் எழுதி வெளிவந்த கதைகளை உள்ளடக்கிய நூல் விகடன் பிரசுரமாக வெளியிடப்படுவதோடு, அவரது பிறந்த நாள் கொண்டாட்டமும் எதிர்வரும் ஜூலை 24ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் உள்ள டிடிகே அரங்கத்தில் கோலாகலமாக நடைபெறுகின்றது.

கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார் உரை  

ஜெயகாந்தனின் கதைகளின் நூல் தொகுப்பு பணியை இலண்டனில் உள்ள டாக்டர் ராம் மற்றும் திருமதி வனிதா ராம் ஆகிய இருவரும் மேற்கொண்டிருந்தனர்.

ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வெளியான அதே அச்சில், அதே ஓவியங்களோடு, அதே வடிவமைப்போடு “ஜெயகாந்தன் கதைகள்” நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதுமையான, வித்தியாசமான முயற்சியாகும்.

ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் நிகழ்விற்கு பிரபல வணிகரும் இலக்கிய ஆர்வலருமான பதமஸ்ரீ நல்லி குப்புசாமி தலைமையேற்கின்றார்.

விகடன் நிறுவனத்தின் தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன் நூலை வெளியிடுகின்றார்.

கதைகளின் படைப்பாளர் ஜெயகாந்தன், ஓவியர்கள் கோபுலு, மாயா ஆகியோர் குறித்த வாழ்த்துரைகளை கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் சிவகுமார், நடிகை திருமதி இலட்சுமி ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.

தன் வாழ்நாளில் ஜெயகாந்தன் நவீன தமிழ் இலக்கியத்திற்கு வழங்கிய பங்களிப்பை கௌரவிக்கும் விதத்திலும், அவரது படைப்பாற்றலுக்கு மகுடம் சூட்டும் விதத்திலும் இந்த நூல் வெளியீட்டு விழாவும், அவரது பிறந்த நாள் கொண்டாட்டமும் நடைபெறுகின்றது.