Home இந்தியா எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தன் : தமிழ் எழுத்தாளர்களுக்கு சுயமரியாதையும் கௌரவமும் பெற்றுத் தந்தவர்

எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தன் : தமிழ் எழுத்தாளர்களுக்கு சுயமரியாதையும் கௌரவமும் பெற்றுத் தந்தவர்

1274
0
SHARE
Ad

(24 ஏப்ரல் 1934-இல் பிறந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரின் இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கே உரித்தான சிறப்பியல்புகளை நினைவு கூர்கிறார் இரா.முத்தரசன்)

மதுரையின் தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து இசையமைக்கும் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர் அந்த இளம் சகோதரர்கள். பசியோடும், வறுமையோடும் போராடிக் கொண்டிருந்தனர். தாங்கள் சிறுவயது முதல் ஈடுபாடு கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் பரிச்சயம் கொண்டவர் என்பதால் அந்த பிரபல எழுத்தாளரைச் சந்திக்க  அவரின் இல்லம் தேடிச் செல்கின்றனர்.

அவர்களை உபசரித்து அருந்துவதற்கு காப்பி தந்த அந்த பிரபல எழுத்தாளர், “என்ன விஷயம்?” எனக் கேட்கிறார். “சினிமா வாய்ப்பு தேடுகிறோம். நீங்கள் உதவ வேண்டும். உங்களை நம்பித்தான் வந்திருக்கிறோம்” என்கின்றனர் அந்த சகோதரர்கள்.

#TamilSchoolmychoice

அவர்களை நோக்கி சீறுகிறார் எழுத்தாளர். “என் அனுமதியில்லாமல் என்னை நம்பி எப்படி வந்தீர்கள்? முதலில் உங்களை நம்புங்கள்” என ஆத்திரத்துடன் அவர்களை திருப்பி அனுப்புகிறார்.

ஏமாற்றத்துடன் வெளியேறிய அந்த இளம் சகோதரர்கள் தங்களின் முயற்சிகளை மட்டும் கைவிடவில்லை. தொடர்ந்தனர். எழுத்தாளர் சொன்னது போலவே தன்னம்பிக்கையை இழக்காமல் செயல்பட்டனர்.

சினிமா இசை வாய்ப்பு தேடிய அந்த சகோதரர்கள் இளையராஜாவும் அவரின் மூத்த சகோதரர் ஆர்.டி.பாஸ்கரும். அவர்களுக்கு தன்னம்பிக்கையை போதித்து அனுப்பிய பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்.

காலம் சுழன்றது. பிற்காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார் இளையராஜா. அதே ஜெயகாந்தனை அடிக்கடி சந்தித்தார். இருவருக்குமான நெருங்கிய நட்பு ஜெயகாந்தனின் இறுதிக் காலம் வரை நீடித்தது. ஜெயகாந்தன் குறித்த ஆவணப் படம் ஒன்று எடுக்கப்படுவதற்கும் உறுதுணையாக இருந்தார் இளையராஜா. அந்தப் படத்திற்கு அவரே இசையமைத்துத் தந்தார், பணம் வாங்காமல்!

இளையராஜாவுக்கும் அவரின் சகோதரருக்கும் இளம் வயதில் போதித்தது போலவே, தன் வாழ்க்கையிலும் இறுதிவரை தன்னம்பிக்கையோடும், எழுத்துலகில் ஒரு சிங்கமாகவும், பல அரசியல் தலைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தவர் ஜெயகாந்தன்.

பாரதியார், பாரதிதாசனுக்குப் பின்னர் நவீன தமிழ் எழுத்துலகின் தொடர்ச்சியான இலக்கியகர்த்தாக்களில் ஒருவராகவும் – உரை நடை இலக்கியத்தின் முதன்மை முன்னோடியாகவும் – கொண்டாடப்படுபவர் ஜெயகாந்தன்.

தனது மறைவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துப் பணியை அவர் நிறுத்திக் கொண்டாலும் அவரின் சிம்மாசனம் வேறொரு எழுத்தாளரால் அலங்கரிக்கப்பட எழுத்துலகம் அனுமதிக்கவில்லை.

தமிழ் வாசகர்களும், எழுத்தாளர்களும் அவரைப் போற்றுவதற்குக் காரணம், எந்த நிலையிலும் தன் சுயமரியாதையை இழக்காமல், நான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் வலம் வந்தவர் அவர். தமிழ் எழுத்தாளர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர்.

அதற்கேற்ப கம்பீரமான தோற்றத்துடனும் முறுக்கு மீசையுடனும் மிரட்டும் தோரணையைக் கொண்டிருந்தவர். அவரை ஒரு நிகழ்ச்சிக்கு பேச அழைத்தால், மற்றவர்கள் பேச்சையெல்லாம் அமர்ந்து கேட்கும் பொறுமையும், வழக்கமும் அவருக்கு இருந்ததில்லை. தனக்குரிய நேரத்தில் மட்டும் வந்து, தனதுரையை நிகழ்த்தி விட்டு சென்றுவிடும் புதுமையான நடைமுறையைக் கொண்டிருந்தார் அவர்.

காமராஜரை மட்டும் தன் அரசியல் தலைவராகப் போற்றியவர், மற்ற எல்லா அரசியல் தலைவர்களையும் பாரபட்சமின்றி விமர்சித்தார்.

சாகித்திய அகாடமி, ஞானபீடம் போன்ற உயரிய விருதுகளைப் பெற்று தமிழ் அன்னைக்குப் பெருமை சேர்த்தார். இந்திய அரசாங்கத்தின் பத்ம பூஷண் விருதும் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மலேசியாவுக்கும் வருகை தந்து பல ஊர்களில் இலக்கிய உரைகள் நிகழ்த்தியிருக்கிறார் ஜெயகாந்தன்.

ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றுவரை அவரின் நாவல்களும், சிறுகதைகளும் – அவற்றின் புரட்சிகரமான கருத்துகளுக்காகவும் – விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளைப் பேசியதற்காகவும் – இலக்கிய விமர்சகர்களால் விவாதிக்கப்படுகின்றன.

அவரின் பல நாவல்கள் திரைப்படமாக உருவாகின. சில படங்களை அவரே இயக்கவும் செய்தார். சில படங்களுக்குப் பாடல்களும் எழுதியிருக்கிறார். பாதை தெரியுது பார் படத்தில் ஒலித்த புகழ் பெற்ற பாடலான ‘தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே…” பாடலை எழுதியது ஜெயகாந்தன்தான்.

அவரின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் திரைப்படமாக பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்றது. விருதுகளையும் குவித்தது. அதே நாவல்தான் அவருக்கு சாகித்திய அகாடமி விருதையும் பெற்றுத் தந்தது.

இத்தனைக்கும் ஜெயகாந்தன் ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்டவர். கம்யூனிஸ்ட் கட்சி சூழலில் தன் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அச்சுக் கோப்பாளர் பணி தொடங்கி பல வேலைகளைச் செய்தவர்.

இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட ஜெயகாந்தனின் பிறந்த நாள் இன்று. 1934-ஆம் ஆண்டு பிறந்தவர்.

உடல்நலக் குறைவால் தனது 81-வது வயதில் 8 ஏப்ரல் 2015-இல் காலமானார் ஜெயகாந்தன்.

– இரா.முத்தரசன்