கோலாலம்பூர் : அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) புதிய சதித்திட்டம் தீட்டுவதாக கூறுவது ஆதாரமற்றது என்று பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு கூறினார்.
தி வைப்ஸ் இணைய செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்தி பிரதமரை வீழ்த்த பெர்சாத்து கட்சியிலும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலும் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் வரவிருக்கும் ஆறு மாநில தேர்தல்களில் கவனம் செலுத்துகிறது – குறிப்பாக பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் என அசுமு குறிப்பிட்டார்.
“உண்மையாக, இதுபோன்ற திட்டங்களைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. நான் எனது கட்சித் தலைவருடன் (முஹைதின் யாசின்) தினமும் தொடர்பில் இருக்கிறேன். மாநில சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல் களத்தில் வேலை செய்யவும், தேர்தல் இயந்திரங்களை முடுக்கி விடவும் அவர் எங்களிடம் வலியுறுத்தி வருகிறார்” என்றார் அசுமு.
“அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்த முயற்சியையும் அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை. நான் எந்த பேச்சு வார்த்தையையும் இந்த விஷயத்தில் கேள்விப்படவில்லை. மேலும் அரசாங்க சார்புடைய எந்த நாடாளுமன்ற உறுப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை” என்றும் அசுமு தெரிவித்தார்.