கோலாலம்பூர், ஜூலை 21 – கடந்த வாரம் குவாந்தானில் தனது புதிய காரின் மீது எதிர்பாராத விதமாக காரை மோதிய பெரியவரை, தகாத வார்த்தைகளால் திட்டிய பெண்மணிக்கு டிஎச்ஆர் வானொலியில் பேச வாய்ப்பளித்ததற்காக, அந்நிறுவனத்திற்கு எதிராக பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அது குறித்த செய்தியை செல்லியலில் கடந்த ஜூலை 17-ம் தேதி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தி மறுநாள் தமிழ்நேசன் நாளிதழில் அப்படியே பிரசுரமானது.
இந்நிலையில், அப்பெண்மணி ஏரா எஃப்.எம் வானொலிக்கு அளித்த நேர்காணலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாங்கள் டிஎச்ஆர் வானொலியில் ஒலிபரப்பியதாக டிஎச்ஆர் வானொலி அறிவிப்பாளர் உதயா விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய தமிழ்நேசன் நாளிதழில் உதயா அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:-
“அப்பெண்மணி தன்னுடைய நடத்தைக்காக அந்த சீன முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஒருவர் மன்னிப்புக் கேட்டால் அவரது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென புத்தமதம் கூறுகின்றது. அவ்வகையில், அப்பெண்மணியின் மன்னிப்பை பெருந்தன்மையுடன் தாம் ஏற்றுக் கொண்டதாக அந்த சீன முதியவர் கூறியதையும் நாங்கள் வானொலியில் ஒலிபரப்பினோம். வானொலி அறைக்கு வந்த அந்த பெண்மணியுடன் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது அந்த பெண்ணின் மன்னிப்பை பொது மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக தான். ஆனால் எனது நோக்கத்தை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்கள் எனக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்”
“இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரே அப்பெண்மணியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் நோன்புப் பெருநாளுக்கு வீட்டுக்கு வரும்படி அந்த பெண்மணி விடுத்த அழைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். இப்பிரச்சனைக்கு சம்பந்தப்பட்டவர்களே தீர்வு கண்ட வேளையில் சம்பந்தப்பட்ட பெண்மணியை தண்டிக்க நாம் ஏன் துடிக்க வேண்டும்? அந்த பெண்மணியை போலீஸ், விசாரணைக்காக கைதும் செய்துள்ளது. நமது குடும்ப உறுப்பினர்கள் இதே போன்று தவறு செய்தால் நாம் பகிரங்கப் படுத்துவோமா? முடிந்த வரையில் மூடி மறைக்கத்தானே பார்ப்போம். எனவே வெளிப்படையாக மன்னிப்புக் கேட்ட அப்பெண்மணியின் மன்னிப்பை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்வதே சிறப்பாகும்.”
– இவ்வாறு உதயா கூறியுள்ளதாக தமிழ்நேசன் செய்தி வெளியிட்டுள்ளது.