Home நாடு “இந்துக்கள் பொருட்கள் புறக்கணிப்பு-ஒரே மலேசியா கோட்பாட்டை சிதைக்காதீர்கள்” – முருகையா வலியுறுத்து

“இந்துக்கள் பொருட்கள் புறக்கணிப்பு-ஒரே மலேசியா கோட்பாட்டை சிதைக்காதீர்கள்” – முருகையா வலியுறுத்து

669
0
SHARE
Ad

Murugiah T. Datoகோலாலம்பூர், ஜூலை 31 – இந்துக்கள் நடத்தும் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் சொல்வதை உண்மையான மலேசியர்களால் நிச்சயமாக ஏற்க முடியாது என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.

பினாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், உஸ்தாஸ் சாகுல் அமீட் என்பவர், இந்துக்கள் தயாரிக்கும் மசாலை பொருட்களை ஏன் வாங்குகிறீர்கள்? இஸ்லாமியர்களின் பொருட்களை மட்டுமே வாங்கி இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று பேசியதை சுட்டிக்காட்டி உள்ள அவர், இத்தகைய பேச்சுக்கள் கடும் கண்டனத்திற்கு உரியவை எனச் சாடி உள்ளார்.

“இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்று பிரித்துப் பேசுவதும், பிரிவினைக்கு வழிவகுப்பதும் சரியல்ல. அந்த நிகழ்ச்சியில் சாகுல் ஹமீட், குறிப்பிட்ட இரு இந்திய மசாலை நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவற்றின் தயாரிப்புகளை இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“ஒரே மலேசியா கோட்பாடு சிதைந்து விடும்’

Ustaz Shahul Hamid 440 x 218“மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள் என மூவின மக்களும் இணைந்து வாழ்ந்தால்தான் ஒரே மலேசியா கோட்பாடு கட்டிக் காக்கப்படும். மாறாக இத்தகைய பேச்சுக்களும் செயல்களும் அதிகரிக்குமேயானால், ஒரே மலேசியா கோட்பாடு சிதைந்து போய்விடும்,” என்று டத்தோ முருகையா எச்சரித்துள்ளார்.

நாட்டிற்கு மிகச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வரும் பிரதமர் நஜிப்பின் கரங்களை இத்தகைய தன்னிச்சையான பேச்சும் போக்கும் நிச்சயம் வலுப்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இனத்துவேஷப் பேச்சுக்கள் உலகின் எந்தப் பகுதியிலும் நன்மை விளைவித்தது கிடையாது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இனப்பாகுபாடுடன் செயல்பட்ட நாடுகளுக்கு ஏற்பட்ட கதியை நாம் அறிவோம். அதை உணர்ந்துள்ள நாட்டின் தலைமைத்துவம் ஒரே மலேசியா கோட்பாட்டை அறிவித்து, அதை மிகச் சிறப்பாக செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் மலேசியாவுக்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர் ஓபாமாவும், மலேசியர்களிடையே எந்தவித பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும், அனைத்து இனங்களையும் அரவணைத்துச் சென்றால் மட்டுமே மலேசியா முன்னேற்றப் பாதையில் செல்லும் என்றும் கூறியதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்றும் முருகையா தனது அறிக்கையில் நினைவுபடுத்தியுள்ளார்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பன போன்ற நல்மொழிகளுடன் பயணித்த இனத்தைச் சேர்ந்தவர்களை, எந்த அடிப்படையில் சாகுல் அமீட் புறக்கணிக்கச் சொல்கிறார் என்பது புரியவில்லை. உண்மையான மலேசியர்கள் அவரது கூற்றை ஏற்கப் போவதில்லை என்பது உறுதி” என்று தெரிவித்துள்ள முருகையா,

“நாடு அடுத்தடுத்து இரு பேரிடர்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதமர் நஜிப் பெருநாளையொட்டிய திறந்த இல்ல நிகழ்வை ரத்து செய்துள்ளார். பேரிடர்களால் ஒவ்வொரு மலேசியரின் மனமும் புண்பட்டுள்ள நிலையில், இத்தகைய இன வெறுப்பு பேச்சுக்கள், நமக்கு மேலும் வருத்தத்தையும் வேதனையையும் மட்டுமே அளிக்கிறது,” என்று டத்தோ முருகையா மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சாகுல் அமீட்டின் பேச்சு குறித்த விவரங்களும், அது தொடர்பான காணொளிக் காட்சியும் காவல் துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் வசம்  அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது பேச்சு குறித்து காவல்துறையில் முறையிட்டிருப்பதாகவும் டத்தோ முருகையா மேலும் கூறினார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.