கீவ், ஆகஸ்ட் 1 – உக்ரைன் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக்கின் பதவி விலகலை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது பதவில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஆதரவாளர்களுடனான உள்நாட்டுப் போரின் காரணமாக அரசியல், பொருளாதாரம், வாழ்க்கை முறை உட்பட அனைத்து விவகாரங்களிலும் பெரும் பின்னடைவை உக்ரைன் சந்தித்து வருவதால், அந்நாட்டில் ஆளும் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த இரு பெரும் கட்சிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டன.
இதைத் தொடர்ந்து, பெரும்பான்மையை இழந்த அந்நாட்டின் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் தனது பதவியிலிருந்து கடந்த 24-ம் தேதி விலகுவதாக அறிவித்தார்.
எனினும், யாட்சென்யுக்கின் பிறகு யார் பிரதமர் பதவியை ஏற்பது என்ற குழப்பம் நீடித்தது. இந்த நிலை உக்ரைனில் மேலும் குழப்பத்தை அதிகரிக்கும் என்பதால் அந்நாட்டு நாடாளுமன்றம் அவரின் பதவி விலகலை கிடப்பில் வைத்தது.
இது தொடர்பாக நேற்று உக்ரைன் நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமரின் பதவி விலகலை ஏற்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், பிரதமரின் பதவி விலகலை ஏற்க வேண்டாம் என பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனையடுத்து, ஆர்செனி யாட்சென்யுக்கின் பதவி விலகலை நிராகரிப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்தார்.