கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – மலேசியாவின் மிகப் பெரிய மலிவு விலை விமான நிறுவனமான ஏர் ஆசியா, கடந்த ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 11.3 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
அதோடு, தற்போது இந்த விமான நிறுவனத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள விமானங்களின் என்ணிக்கை அளவு 166 விமானங்களாக விரிவடைந்ததுள்ளது.
ஏர் ஆசியாவின் விற்பனையின் அளவும் ஒரு வருடத்திற்கு 11.67 பில்லியனிலிருந்து 12.81 பில்லியன் வரை உயர்வு கண்டுள்ளது.
ஏர் ஆசியா முடிந்த அரை காலாண்டில் ஒன்பது புதிய விமானங்களைக் கொள்முதல் செய்துள்ளது.
மலேசியாவில் இயங்கிவரும் ஏர் ஆசியா நிறுவனம் அனைத்து அம்சங்களிலும் வலுவான பங்களிப்பாளராக இருக்கிறது.
அதே வேளையில் தாய்லாந்து நாட்டின் ஏர் ஆசியா நிறுவனம் 78% இறக்கம் கண்டுள்ளது. இதற்கு முதன்மை காரணமாக தாய்லாந்து நாட்டின் அரசியல் நிலைத்தன்மையற்ற சூழ்நிலையே காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனால், அந்நாட்டின் சுற்றுலாத்துறையிலும் மந்தம் ஏற்பட்டுவிட்டதால் அந்த நாட்டின் விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தோனிஷியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஏர் ஆசியா நிறுவனமும் முன்பைக் காட்டிலும், தற்பொழுது 78% சரிவை எதிர்நோக்கியுள்ளது. மற்ற விமான நிறுவனங்களுடன் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக இச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓர் ஆண்டில் ஏர் ஆசியா நிறுவனம் மொத்தம் 45 விமானங்களை தனது சேவையில் அதிகரித்துள்ளது. அதில், 14 மலேசியா நிறுவனத்திற்கும், எட்டு தாய்லாந்து நிறுவனத்திற்கும், மற்றும் ஆறு இந்தோனிசியா நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஏர் ஆசியா நிறுவனத்தின் வர்த்தகம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 46% உயர்வு கண்டுள்ளது.
ஏர் ஆசியா தனது அடுத்த கட்ட இலக்காக இந்தியாவைக் குறி வைத்து அங்கேயும் கால் பதித்துள்ளது.
மலேசியாவில் புதிதாக களத்தில் குதித்துள்ள ஏர் மலிண்டோவும் தனது மலிவு விலை விமான சேவையில் முத்திரை பதித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.