Home நாடு காலிட் இப்ராகிமிற்கு எதிராக பாஸ் உதவித் தலைவர் ஹூசாம் மூசா சாடல்

காலிட் இப்ராகிமிற்கு எதிராக பாஸ் உதவித் தலைவர் ஹூசாம் மூசா சாடல்

580
0
SHARE
Ad

Husam Musa PASகோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – காலிட் இப்ராகிம் விவகாரத்தால் பாஸ் கட்சிக்குள் கடுமையான பிளவுகள் ஏற்பட்டுள்ளன. பிகேஆர் கட்சியும், எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் காலிட்டுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியுள்ள வேளையில், பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணியின் மற்றொரு உறுப்பியக் கட்சியான பாஸ் காலிட்டுக்கு ஆதரவாக நிற்கின்றது.

இருப்பினும், சிலாங்கூரைச் சேர்ந்த பாஸ் கட்சியின் இரண்டு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே, வான் அசிசாவுக்கு ஆதரவாக தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில், பாஸ் கட்சியின் உதவித் தலைவரான டத்தோ ஹூசாம் மூசா (படம்), மந்திரி பெசாராக தான் நீடிப்பதற்கு காலிட் இப்ராகிம் பாஸ் கட்சியை பயன்படுத்திக் கொள்வதாக கடுமையாக சாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில், சிலாங்கூர் மாநிலத்தை ஆள்வது மக்கள் கூட்டணி என்பதை மறு உறுதிப்படுத்திய ஹூசாம், மக்கள் கூட்டணியில் இல்லாத ஒருவர் இன்னும் மந்திரி பெசாராகத் தொடர்வது எவ்வாறு சாத்தியம் எனக் கேள்வி எழுப்பினார்.

காலிட்டுக்கு பாஸ் கட்சியிலிருந்து கிடைத்து வந்த ஆதரவு அவர் மக்கள் கூட்டணியைச் சேர்ந்தவர் என்பதால் தரப்பட்ட ஆதரவு என்றும் தெரிவித்த மூசா, காலிட்டின் தனிப்பட விருப்பத்திற்காக அவர் பாஸ் கட்சியையே விழுங்குவதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

பிகேஆர், ஜசெக ஆட்சிக் குழு உறுப்பினர்களை நீக்குவதற்கு பாஸ் கட்சியின் அனுமதியை காலிட் பெறவில்லை என்று தெரிவித்த மூசா, அவரது நடவடிக்கைகளினால் மக்கள் கூட்டணியே பிளவுபடும் நிலைமைக்கு ஆளாகி விட்டது என்றும், சிலாங்கூரில் பாஸ் கட்சியின் நற்பெயரை மக்களிடையே கெடுத்து விட்டார் என்றும் மேலும் சாடினார்.

மூசா கிளந்தானில் உள்ள சாலோர் சட்டமன்றத்தின் உறுப்பினருமாவார்.

சிலாங்கூர் வாக்காளர்கள்,  மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக அளித்த வாக்குகளினால்தான் பாஸ் 15 சட்டமன்ற உறுப்பினர்களை சிலாங்கூரில் பெற முடிந்தது, ஆனால் இப்போது அவர்கள் அம்னோவுடன் இணைந்து கொள்வது மக்களுக்கு செய்யும் துரோகமாகும் – இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முரண்பட்டதாகும் என்றும் மூசா குறிப்பிட்டார்.

எனவே, கண்ணியமான முறையில் காலிட் பதவி விலகுவதே சிறந்தது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.