அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத உலகின் நான்கே நாடுகளில், இந்தியாவும் ஒன்று. இதன் காரணமாக ஆஸ்திரேலியா நீண்ட காலமாக இந்தியாவிற்கு யுரேனியம் வழங்க தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில் இந்தியாவில் நிலையான ஆட்சி அமைந்ததும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சுமூகப் பேச்சு வார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதும் ஆஸ்திரேலியா தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இன்று டோனி அப்போட் மற்றும் 30 உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தகக் குழுவினர் இந்தியா வரவிருக்கின்றனர். ஆஸ்திரேலியப் பிரதமரின் இந்தியப் பயணத்தின் போது அணு தாது விற்பனை மட்டும் அல்லாது, தேசிய, சர்வதேச, இருதரப்பு விவகாரங்கள் குறித்தும், பாதுகாப்பு, வர்த்தகம் முதலிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஆஸ்திரேலிய வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக டோனி அப்போட், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறுகையில்,”இந்தியாவிற்கு யுரேனியம் விற்பனை செய்ய ஆஸ்திரேலியா தயார். இது தொடர்பான அணுசக்தி ஒப்பந்தம், விரைவில் கையெழுத்தாகும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
உலகின் மூன்றில் ஒரு யுரேனியம் தாது, ஆஸ்திரேலியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.