புது தில்லி, செப்டம்பர் 17 – ஆசிய அளவில் பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் உள்ள இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். எனினும் இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சனைகள் இருந்து வருவது வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில் சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங்கின் இன்றைக்கு இந்தியா வருவது இரு நாடுகளின் உறவிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது.
சீனாவில் ஜி ஜிங்பிங்கின் தற்போதய ஆட்சி முறையில் பொருளாதார வளர்ச்சி மெச்சும் படியாக அமையவில்லை. அவரது ஆட்சியின் கீழ் வங்கிகளின் செயல்பாடுகளும், நிலபுலன்கள் மற்றும் சொத்துகளின் வர்த்தகமும் மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றன.
தற்போதய அளவில் அந்நாட்டில் இதன் காரணமாக பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் பெரும் பொருளாதார ஆளுமை அற்ற நாடாக சீனா மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
இந்நிலையில், ஜி ஜிங்பிங்கின் இந்திய வருகை முழுவதும் வர்த்தக நோக்கமாகவே பார்க்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
பல வருடங்கள் கழித்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் அந்நிய நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கச் செய்துள்ளன.
மேலும், உள்ளநாட்டு நிறுவனங்கள் சமீபத்தில் பெரும் வளர்ச்சியை கண்டு வருவதற்கு மோடி அரசின் துரித நடவடிக்கைகளும் ஒரு காரணம். இதன் காரணமாக எதிர்வரும் 2016-ம் ஆண்டு இந்தியா பொருளாதார ரீதியாக சீனாவை முந்திச் செல்லும் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து சிங்கப்பூரில் இயங்கி வரும் சிஎல்எஸ்எ அமைப்பின் பொருளாதார நிபுணர் ராஜீவ் மாலிக் கூறுகையில், “2016-ம் ஆண்டு ஆசிய அளவில் இந்தியா 7.2 சதவீத வளர்ச்சியையும், சீனா 7.1 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கும்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறாக பொருளாதார அளவில் இந்தியா பல வருடங்களுக்குப் பிறகு தனது ஆளுமையை செலுத்தத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சீனா இந்தியாவில் தனது முதலீடுகளை தொடங்குவதில் அதிக வருகின்றது.
ஜிங்பிங்கின் வருகை உறவுச் சிக்கல்களை நீக்குவதை காட்டிலும் வர்த்தக ரீதியாகவே இருக்கும் என்று பொது விமர்சகர்களால் கூறப்படுகின்றது.