மிரி, செப்டம்பர் 17 -நாளை கொண்டு வரப்படவுள்ள எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான பயணிகளின் நல்லுடல்களில், மேலும் ஒரு பயணியின் நல்லுடல் சேர்க்கப்படவுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய வளர்ச்சித்துறையின் அமைச்சர் டத்தோஸ்ரீ ரோஹானி அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 14 -ம் தேதி, போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் வெளியிட்ட அறிக்கையில், 4 மலேசியப் பயணிகளின் நல்லுடல்கள் அடையாளம் காணப்பட்டதாக அறிவித்தார்.
அதில் அஃப்சால் தம்பி (வயது 17) மற்றும் அஸ்மீனா தம்பி (வயது 15 ) ஆகிய இரண்டு பயணிகளின் நல்லுடல்களை மலேசியா கொண்டு வர மட்டுமே டச்சு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
எம்எச்17 விமானப் பணியாளர் சைக் முகமட் நோர் முகமட்டின் நல்லுடலைக் கொண்டு வர டச்சு அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மற்றொரு மலேசியரான லியாவ் யாவ் சீ (வயது 38) -ன் நல்லுடலை கொண்டு வர தற்போது தகுந்த ஆவணங்களை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர் என்று ரோஹானி நேற்று அறிவித்தார்.