வாஷிங்டன், அக்டோபர் 1 – ஐநா மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை நேற்று வெள்ளை மாளிகையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது பிரதமர் மோடி, ஒபாமாவுக்கும் அவரது மகள்களுக்கும் தனிப்பட்ட முறையில் பரிசுகள் வழங்கினார். பகவத் கீதைக்கு, மகாத்மா காந்தியடிகள் எழுதிய உரையுடன் கூடிய புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பிற்குப் பின்னர் ஒபாமா, நரேந்திர மோடியை அங்கிருக்கும் மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவிடத்திற்கு தானே அழைத்துச் சென்றார்.
வழக்கமாக, ஒபாமா தன்னை சந்திக்க வரும் முக்கியத் தலைவர்களை, தனது அலுவலகத்தில் மட்டுமே சந்திப்பார் என்றும், ஆனால் இம்முறை ஒபாமாவே நேரடியாக மோடியை மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங், கடந்த 1959-ம் ஆண்டு, இந்தியா சென்ற போது, டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய படம் மற்றும் அப்போது அவர் பேசிய உரை அடங்கிய, குறுந்தட்டையும் மோடி, ஒபாமாவிடம் பரிசாக வழங்கினார்.