4 அக்டோபர் – “நரேந்திர மோடியா? அமெரிக்காவுக்கு அவர் வர முடியாது. அவருக்கு குடிநுழைவு அனுமதி (விசா) தர மாட்டோம்” என அமெரிக்க அரசாங்கம் தடை விதித்ததொரு காலம்.
ஆனால், பிரதமராக மிகப் பெரிய பெரும்பான்மையோடு நரேந்திர மோடி பதவியேற்றதும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதே நரேந்திர மோடிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்க தயாரானது அமெரிக்கா.
பிரதமராக தனது முதல் வருகையின் போது மோடியும் அமெரிக்காவையே ஒரு கலக்கு கலக்கினார்.
மரபுகளை மீறி, தங்கும் விடுதியிலிருந்து வெளியே வந்து தன்னைக் காண வந்திருந்தவர்களிடம் கையசைத்தார் – உரையாடினார்.
இதுவரை எந்தவொரு உலகத் தலைவரும் சாதிக்காத அளவில், நியூயார்க் நகரில் மெடிசன் ஸ்குவேர் எனப்படும் திறந்த வெளி அரங்கில் பணம் கொடுத்து வந்த 20,000 அமெரிக்க இந்தியர்கள் முன்னிலையில் ஒரு மணி நேரம் அபாரமான உரையொன்றை வழங்கினார்.
அந்த இடத்திற்கான ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வாடகையை 20 பேர் ஆளுக்கு ஐம்பதாயிரம் எனக் கொடுத்து அந்த இடத்தை வாடகைக்கு எடுத்தனர் என்பது ஒரு கொசுறு தகவல்.
பிஐஓ எனப்படும் வெளிநாட்டு இந்தியர்களுக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இந்தியா வருவதற்கான குடிநுழைவு அனுமதி இலவசம் (விசா) என அமெரிக்காவில் அறிவித்தார் மோடி.
இங்கே அவரது வருகையின் போது எடுக்கப்பட்ட காட்சிகளின் படத் தொகுப்பைக் காணலாம் :
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வருகை தரும் மோடி, காத்திருப்பவர்களை நோக்கி கையசைக்கின்றார்.
ஒபாமாவுடன் கைகுலுக்கல்…ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தங்களின் சந்திப்பின் போது விவாதித்தனர். பக்கத்தில் இருப்பவர்கள் மொழி பெயர்ப்பாளர்கள்…
வெள்ளை மாளிகையின் ‘ஓவல்’ (Oval Office) எனப்படும் அறையில் சந்திப்பு முடிந்ததும், இருவரும் இணைந்து தங்களின் சந்திப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டனர். நரேந்திர மோடி தனது பத்திரிக்கை அறிக்கையை வாசிப்பதை கூர்ந்து கவனிக்கும் ஒபாமா…
அமெரிக்காவின் துணையதிபர் ஜோ பிடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரி ஆகியோருடனும் மோடி பேச்சு வார்த்தைகள் நடத்தினார். ஜோ பிடனுடன் கை குலுக்கும் மோடி. அருகில் ஜோன் கெர்ரி.
ஒபாமாவின் பத்திரிக்கையாளர் விளக்கத்தை செவிமெடுக்கும் நரேந்திர மோடி..இவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் இணக்கமான போக்கும், நெருக்கமும் காணப்பட்டதாக தகவல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.
மோடியின் அமெரிக்க வருகையின்போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவே மரபுகளை மீறிய அதிசயங்களும் நடந்தன. ஒபாமாவுடன் சந்திப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்க கறுப்பின உரிமைப் போராட்டவாதி மார்ட்டின் லூதர் கிங் நினைவாலயத்திற்கு சென்ற மோடியை ஒபாமாவே நேரடியாக அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார்.
வழக்கமாக, ஒபாமா இவ்வாறு செய்ததில்லை என்றும், பொதுவாக அமெரிக்க அதிபர் இதுபோன்று, உலகத் தலைவர்களுடன் ஒரு நினைவிடம் சென்று சுற்றிக் காட்டுவது என்பது மரபில் இல்லாத ஒன்று என்றும் அமெரிக்க தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க துணையதிபர் ஜோ பிடன், வெளியுறவு அமைச்சர் ஜோன் கெர்ரி இருவரும் வெளியுறவு அமைச்சகத்தில் வழங்கிய மதிய உணவு விருந்துபசரிப்பில் மோடி உரையாற்றுகின்றார்.
பிரம்மாண்டமாக, கம்பீரமாக எழுந்து நிற்கும் மார்ட்டின் லூதர் கிங் சிலையோடு கூடிய நினைவகத்தில் ஒபாமாவின் விளக்கத்தைக் கேட்கும் நரேந்திர மோடி..
மோடியின் ஐந்து நாள் வருகை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கும், நரேந்திர மோடியின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்குக்கும் கிடைத்த வெற்றி என இந்திய அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
படங்கள் – EPA photos