Home நாடு “கிளைகளுக்கு அனுமதி தந்தால் ஒரு லட்சம் பேரை கட்சிக்கு அழைத்து வர முடியும்” – முருகையா...

“கிளைகளுக்கு அனுமதி தந்தால் ஒரு லட்சம் பேரை கட்சிக்கு அழைத்து வர முடியும்” – முருகையா சவால்

658
0
SHARE
Ad

Murugiah T. Datoகோலாலம்பூர், அக்டோபர் 19 – உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டால் மஇகாவில் தம்மால் பல ஆயிரம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இயலும் என பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சரான டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.

மஇகாவிற்கு வரும்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை கட்சியில் சேர்ப்பதாக கொடுத்த வாக்குறுதியை தாம் இதுவரை நிறைவேற்றவில்லை என ஒரு தரப்பு தன்னை விமர்சித்துள்ள நிலையில், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது தமது கடமை என அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

“100 கிளைகளை அமைப்பதாக மட்டும் கூறினேன்”

#TamilSchoolmychoice

MIC-logoஎந்தச் சூழ்நிலையிலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரை கட்சியில் சேர்ப்பதாக தாம் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தாம் கட்சியில் இணையும்போது 100 கிளைகளை அமைக்க வேண்டும் என அப்போதைய தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

“ஆனால் தலைமை கூறியதைவிடவும் அதிகமாக, மொத்தம் 125 கிளைகளைப் பதிவு செய்யக் கோரி கட்சித் தலைமையகத்தில் மனு செய்தோம். இக்கிளைகளை தொடங்குவதற்கான தொகையையும் செலுத்தி உள்ளோம். அந்தக் கிளைகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதே உண்மை. அவற்றைத் தவிர மேலும் 100 கிளைகளை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. முதலில் விண்ணப்பம் கொடுத்த கிளைகளுக்கான அனுமதியே கிடைக்காத நிலையில், புதிய கிளைகளை எவ்வாறு அமைக்க முடியும்?” என டத்தோ முருகையா கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒருசிலரைப் போல் சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதில் தமக்கு விருப்பம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் நலன் கருதியே தாம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொண்டு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“பழனிவேலுவிடமும் பேசியுள்ளேன்”

palanivel540px_540_361_100“எனக்காக அனுமதிக்கப்பட்ட கிளைகளில் பாதியை முடக்கிவிட்டீர்கள். பிறகு இலக்குகளை எட்டிப்பிடிக்கவில்லை என்று குறைப்பாட்டும் பாடுகிறீர்கள். முதலில் கிளைகளை தொடங்குவதற்கான தடைகளை நீக்கட்டும். பிறகு எத்தனை பேரை கட்சியில் சேர்க்க முடியும், எத்தனை கிளைகளை புதிதாக திறக்க முடியும்? என்பதற்கான பதில்களை இனிவரும் காலம் எடுத்துச் சொல்லும். நான் விண்ணப்பித்துள்ள கிளைகளுக்கு அனுமதி தரும்படி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலிடமும் பேசியுள்ளேன்” என்றும் முருகையா கூறினார்.

“எனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று சிறு கூட்டம் கூறுவதைப் பற்றி கவலையில்லை. மக்கள் மன்றத்திலும், மனத்திலும் யாருக்கு ஆதரவு என்பதை ஒருசிலரைப் போல் ஓர் அறையில் அமர்ந்து கொண்டு யூகிப்பது அறிவுப்பூர்வமானதல்ல. இன்று என்னை விமர்சிக்கும் அதே நாளேடுதான் ஒரு காலத்தில் நான் துணையமைச்சராகப் பணியாற்றியபோது பல்வேறு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. இன்று பதவியில் இல்லை என்பதால் அன்று மக்களுக்காக நான் ஆற்றிய பணிகள், சேவைகள் எல்லாம் இல்லை என்றாகிவிடாது” என்றும் முருகையா குறிப்பிட்டார்.

“பதவிகளை எதிர்பார்த்து நான் கட்சியில் சேரவில்லை. அதனால்தான் பதவிகளைக் குறிவைத்து போட்டியிடவில்லை. தவிர கட்சியில் நான் சேரும் போதிருந்த சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் நான் போட்டியிட வேண்டும் என்று ஒருதரப்பு இந்தளவு விரும்பியிருக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது,” என்று டத்தோ முருகையா கூறியுள்ளார்.

சங்கப் பதிவதிகாரிக்கு எதிரான கூட்டம்தான் – தலைமைக்கு எதிரானதல்ல!

MIC PROTESTS 16 octகடந்த அக்டோபர் 16ஆம் தேதி சங்கப் பதிவதிகாரிக்கு எதிராகவே அனைவரும் அணி திரண்டனரே தவிர, இது ம.இ.கா.வுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படக் கூடாது. ஏனெனில் தேசியத் தலைவரே சங்கப் பதிவதிகாரி முடிவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார் என்றும் முருகையா சுட்டிக்காட்டி உள்ளார்.

“டத்தோஸ்ரீ பழனிவேல் ஜனநாயகத் தன்மையுடன் இந்த விஷயத்தை அணுகும் வேளையில், ஒரு தரப்பினர் மட்டும் இவ்வாறு கூப்பாடு போடுவது ஏன்?” என்றும் டத்தோ முருகையா கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் எடுத்துச் சொன்ன இவ்விஷயங்கள் அனைத்தும் தன்னைப் பற்றி குறை கூறும் தரப்பிற்கும் தெளிவாகத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தூங்குகிறவர்களைத்தான் எழுப்ப முடியும்., ஆனால் தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.

“பதவியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, மக்கள் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறேன். ஆதாரமின்றி, மறைமுகமாக என்னைப் பற்றி அவதூறு பேசி சீண்டிப் பார்க்க வேண்டாம்,” எனவும் டத்தோ முருகையா காட்டமாக கூறியுள்ளார்.