புத்ரா ஜெயா, நவம்பர் 6 – அன்வார் இப்ராகிம் மீதான ஓரினச் சேர்க்கை மேல் முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாவின் வாதம் மந்தமாக இருப்பதாகவும், இதனால் அரசு தரப்பு வழக்கு சற்றே பின்னடைவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வழக்கைக் கண்காணித்து வரும் சில வழக்கறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர்.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அன்வார் தனது ஆதரவாளர்களிடையே உரையாடும் காட்சி
அன்வார் இப்ராகிமே நேரடியாக ஷாபி அப்துல்லா மீது “மீண்டும் சட்டக் கல்லூரிக்குப் படிக்கச் செல்லுங்கள்” என சாடித் தாக்குதல் தொடுத்துள்ளார்.
மேலும், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் பதவியை அடைவதற்காக என்மீது களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் இந்த வழக்கைக் கையாண்டு வருகின்றார் என அன்வார் இப்ராகிம் நேரடியாகவே ஷாபி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் காரணங்களால், வழக்கைக் கண்காணித்து வரும் பொதுமக்கள் மத்தியில் அரசு தரப்பு வழக்கறிஞரின் ஈடுபாடும், வாதமும் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மலேசிய நீதிமன்ற வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு, தனியார் வழக்கறிஞர் ஒருவர் ஏன் அன்வார் வழக்கில் மட்டும் கொண்டு வரப்பட்டிருக்கின்றார் என்பது நீண்ட காலமாக தொடர்ந்து வரும் வாதமாகும்.
அரசு தரப்பு வழக்கறிஞர் மீது நீதிபதி கண்டிப்பு
இதற்கிடையில் இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாபியை (படம்) தவறான அணுகுமுறைக்காக நீதிபதி கண்டித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டரசு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது ‘தாய்லாந்து’ (Thai language) மொழியில் வெளியாகி இருந்த ஓர் அறிவியல் கட்டுரையை தாக்கல் செய்தார் அரசு வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா.
மரபணு மாதிரிகள் சுமார் 65 மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை விவரிக்க அவர் அக்கட்டுரையை தாக்கல் செய்தார். எனினும் தாய்லாந்து மொழியில் உள்ள அந்த கட்டுரையின் உள்ளடக்கத்தை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என நீதிபதி சுரியாடி ஹலிம் ஓமார் தெரிவித்தார்.
“அக்கட்டுரை ‘தாய்’ மொழியில் இருப்பதால் அதன் உள்ளடக்கம் மனிதர்களுடன் சம்பந்தப்பட்டதா அல்லது கோழிகளுக்கானதா என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை,” என்றார் நீதிபதி சுரியாடி.
இக்கட்டுரைக்கு அன்வார் தரப்பு வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் அன்வார் – தனது துணைவியாருடன்…
முன்னதாக அரசுத் தரப்பின் கண்டுபிடிப்புகளை தவறு என்று நிரூபிக்க நினைத்திருந்தால், அன்வார் தனது மரபணு சோதனைக்கு தாமே ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றார் ஷாபி.
“மரபணு சோதனையை ஆஸ்திரேலியாவிலோ அல்லது ஐரோப்பாவிலோ சத்தமின்றி செய்து முடித்திருக்கலாம். அவரது அச்சோதனை முடிவுகளை இந்த நீதிமன்றம் கூடுதல் ஆதாரமாக அனுமதித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்று ஷாபி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இன்றும் அன்வாரின் வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றது. இன்று அல்லது நாளை இறுதித் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே வேளையில், ஐந்து நீதிபதிகள் வழக்கை விசாரித்து வருவதாலும், பல்வேறு விவகாரங்கள் மேல் முறையீட்டில் எழுப்பப்பட்டிருப்பதாலும், வழக்கை நன்கு ஆராய்ந்து தீர்ப்பை வழங்கும் பொருட்டுபிறிதொரு நாளில் தீர்ப்பை நீதிபதிகள் வழங்கக் கூடும் என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி அன்வார் வழக்கு நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட புகார்தாரர் சைபுலுக்கு நீதி வேண்டும் என கோரி சிறு குழுவாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்த சைபுல் ஆதரவாளர்கள்..
படங்கள்: EPA