இந்தியாவின் பிரதமராக மோடி பதவி ஏற்ற பொழுது இந்திய மக்களுக்கு அவர் மீது எத்தகைய எதிர்பார்ப்பு இருந்ததோ, அத்தகைய எதிர்பார்ப்பு தற்போது மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் மீது மும்பை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டால் மும்பையை அனைத்துலக நிதி மையமாக மாற்றுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக பொது நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், மும்பை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கூட்ட நெரிசல். அதனை குறைக்கும் வகையில் சீனா மற்றும் ஜப்பானில் உள்ளது போன்று உயர்ந்த தாழ்வாரங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
அனைத்துலக நிதி மையமாக மும்பை மாற கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மட்டுமல்லாது வர்த்தக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நடவடிக்கைகளை எடுக்க பட்னாவிஸ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விவாதித்து வருகிறார்.
மற்ற நாடுகளிலிருந்து போட்டி
ஆசிய அளவில் மற்ற மையங்கள் அதிக அளவில் பிரகாசிக்க முடியாத நிலையில், மும்பைக்கு இதற்கான வாய்ப்புகள் தற்போது அமைந்துள்ளன.
போட்டி நாடுகளான துபாயில் புவிசார் அரசியல் குழப்பம் நிலவி வருகின்றது. அதற்கு அடுத்த இடத்தில் உள்ள சிங்கப்பூரில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகின்றது. இதன் காரணமாகவே உலக நாடுகளின் கவனம் தற்போது மும்பையின் பக்கம் திரும்பி உள்ளது.
அனைத்துலக நிதி மையமாக மும்பை உருவாகுவதற்கான வாய்ப்புகள் பற்றி பார்க்லேஸ் வங்கியின் தேசிய தலைவர் ஜெய்தீப் கண்ணா கூறுகையில், “சிங்கப்பூர் கட்டமைப்பு ரீதியாக பலமான நாடாக கருதப்பட்டாலும், மக்கள் வாழ்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. ஆனால் மும்பை பன்னாட்டு கலாச்சார இயல்பு கொண்ட நகரம். இங்கு கட்டமைப்புகளை சரி செய்தால், உலக அளவில் நிதித் துறையில் பிரகாசிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனினும் அதற்கு நீண்ட காலமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் இணைந்து பட்னாவிஸின் செயல்பாடுகள் உலக அரங்கில் மும்பை குறித்து எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.