நேப்பிடோ (மியன்மார்) நவம்பர் 13 – நிர்வாகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பிரதமர் நஜிப்பின் சீர்திருத்த, புத்தாக்க முயற்சிகளை இந்தியப் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டி உள்ளார்.
“இந்தியாவும், மலேசியாவும் கடந்த காலங்களில் இணைந்து செயல்பட்டுள்ளன. தங்களது தலைமைத்துவத்தின் கீழ் இந்த ஒத்துழைப்பை நாம் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்,” என மியன்மரில் நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது நஜிப்பிடம் மோடி தெரிவித்தார்.
இரு தலைவர்களும் மியன்மரில் நடைபெறும் 25ஆவது ஆசியான் மாநாட்டின்போது சந்தித்துப் பேசினார். இதையடுத்து இந்திய பிரதமர் அலுவலகம் டுவிட்டர் தளத்தில் இச்சந்திப்பு குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டது.
மக்களின் வாங்கும் சக்திக்குட்பட்ட வீடுகளை நிர்மாணிப்பது குறித்து இந்த பேச்சு வார்த்தையின் போது குறிப்பிட்ட மோடி, மலேசிய நிறுவனங்கள் இத்துறையில் சீரிய பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
“எதிர்வரும் 2022க்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்தியாவில் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே மலேசிய நிறுவனங்கள் அதற்கு முன்வர வேண்டும்,” என்றார் மோடி.
இதற்கிடையே பிரதமர் மோடியை மலேசியாவுக்கு வருகை தருமாறு டத்தோஸ்ரீ நஜிப் அழைப்பு விடுத்தார்.
இதற்கு நன்றி தெரிவித்த மோடி, மலேசிய பிரதமர் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என கேட்டுக் கொண்டார் என இந்தியப் பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.