புதுடெல்லி, நவம்பர் 13 – இன்றைய போட்டி நிறைந்த வணிக உலகில் விளம்பரங்கள்தான் ஒரு பொருளின் சந்தையை நிர்ணயிக்கின்றன. அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரையில், சினிமா நட்சத்திரங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்கள் என்றால் அந்தப் பொருட்களுக்குத் தனி மவுசுதான்.
அதுமட்டுமல்லாமல், ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் சினிமா நட்சத்திரங்கள் தங்களின் விளம்பர ஊதியமாக பெறும் தொகைகளும் தற்போது விண்ணைத் தொடும் அளவுக்கு இருக்கின்றன. ஒரு சினிமா நட்சத்திரத்தின் அழகு, அவர்களின் படங்களின் வெற்றி, பொருட்களுடனான அவர்களின் தொடர்பு இப்படி பல கோணங்களில் ஒவ்வொரு சினிமா நட்சத்திரத்தின் விளம்பர ஊதியமும் நிர்ணயிக்கப்படுகின்றன.
அந்த வகையில் ஒவ்வொருசினிமா நட்சத்திரமும் ஒரு வணிக முத்திரையாக (brand) வணிக நிறுவனங்களால் பார்க்கப்படுகின்றார்கள்.
இன்றைய நிலையில் இந்தியத் திரையுலகில் மிக மதிப்பு வாய்ந்த இரண்டு வணிக முத்திரைகளாக இரண்டு ஆண் நடிகர்கள் பார்க்கப்படுகின்றார்கள்.
ஷாருக்கானும், ரன்பீர் கபூரும்தான் அவர்கள் இருவரும்!
100 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பு
இந்தியாவில் ஆய்வு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட சந்தை ஆய்வின் படி இவர்கள் இருவரும்தான் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் கூடுதலான மதிப்பு கொண்ட வணிக முத்திரைகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஷாருக்கானைப் பற்றி அதிகமாக சொல்ல வேண்டியதில்லை. அவரும் அமீர் கானும்தான் இன்றைய இந்தித் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள். அமீர்கான் விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்ற காரணத்தால், இந்தத் துறையில் ஷாருக்கின் கொடிதான் பட்டொளி வீசிப் பறக்கின்றது.
இவரது பெயருக்கான வணிக முத்திரை மதிப்பு 165 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என கணக்கிடப்படுகின்றது.
ரன்பீர் கபூர், இன்றைய இந்தித் திரையுலகின் இரசிகைகளின் கனவுக் கதாநாயகன். பிரபல நடிகர் ரிஷிகபூர், நீட்டு சிங்கின் மகன். மறைந்த திரையுலகப் பிரம்மா எனப் போற்றப்படும் ராஜ்கபூரின் பேரன்.
இந்த பின்புலங்கள் தவிர, மற்றொரு சினிமா அழகு நட்சத்திரம் கத்ரினா கைஃப்புடன் காதல், தீபிகாவுடன் நெருக்கம் என மற்ற கதாநாயகர்களின் காதுகளில் புகைமூட்டம் வரச் செய்பவர்.
அவரது படங்களும் வரிசையாக வெற்றி பெற்றுவிட, இன்றைய திரையுலகின் கனவுக் கதாநாயகர்களில் முன்னணி வகிப்பவர் என்ற முறையில் ரன்பீர் கபூரின் விளம்பர வருமானமும் உச்சத்தைத் தொட்டிருக்கின்றது.
இவரது விளம்பர வணிக முத்திரை மதிப்பு 130 மில்லியன் அமெரிக்க டாலரைத் தொடுகின்றது.
இவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் கிரிக்கெட் விளையாட்டாளர்கள், எம்.எஸ்.தோனியும் வீராட் கோலியும் என அமெரிக்காவின் வணிக ஆய்வு நிறுவனமான அமெரிக்கன் அப்ராய்சல் (American Appraisal) தனது ஆய்வின் வழி அறிவித்துள்ளது.
தோனியின் விளம்பர மதிப்பு 72 மில்லியன் அமெரிக்க டாலர் என்றும் வீராட் கோலியின் மதிப்பு 56 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என்றும் அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் நட்சத்திரங்களில், இன்னும் திருமணம் ஆகாமல், சினிமா நடிகருக்குரிய உடற்கட்டோடும், அழகோடும் உலா வரும் வீராட் கோலி, கிரிக்கெட் மைதானத்திலும் தனது திறமையைக் காட்டுவதால் அவரது மதிப்பும் ஏகத்துக்கு எகிறிக் கிடக்கின்றது.
போதாக் குறைக்கு, பிரபல இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவோடு காதல் உல்லாசம் என்ற செய்திகள் அவரது பிரபலத்தைக் கூட்டி விட, இன்றைய விளம்பர யுகத்தில் நிறுவனங்கள் நாடும் மற்றொரு முகமாக வீராட் கோலி மாறியிருக்கின்றார்.
நடிகைகளில் தீபிகா, கரினா கபூர், கத்ரினா முன்னணி
சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை 45 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்போடு முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் தீபிகா படுகோனே. அவருக்கு அடுத்த நிலையில் தலா 33 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்போடு உலா வருகின்றனர் கரினா கபூரும், கத்ரினா கைஃபும்!
விளம்பரத்தில் ஈடுபடும் இந்தியாவின் முதல் நிலை 15 நட்சத்திரங்களின் மொத்த மதிப்பு 820 மில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 5,025 கோடி ரூபாய்!
2013-14ஆம் ஆண்டில் இந்தியாவின் உச்ச 15 விளம்பர நட்சத்திரங்களின் மொத்த விளம்பர வருமானம் 1,100 கோடியைத் தாண்டியது. இது அவர்களின் மொத்த வருமானத்தில் 50 சதவீதமாகும்.
சினிமா நட்சத்திரங்கள் என்றால் அவர்களின் அழகையும் தோற்றத்தையும் பார்த்து மக்கள் பெருமூச்சு விட்டது ஒரு காலம். பின்னர் படங்களில் நடிக்க அவர்கள் பெறும் சம்பளங்களைப் பார்த்து பெருமூச்சு விட்டது இன்னொரு கால கட்டம்.
இப்போதோ, சில நிமிட விளம்பரப்படங்களில் தோன்றுவதற்காக மட்டும், தங்களின் மொத்த வருமானத்தில் பாதியை சம்பாதித்து விடும் அளவுக்கு வணிக சந்தையில் மதிப்போடு உலா வரும் சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து அனைவருக்கும் வருவது இரட்டைப் பெருமூச்சு!
-இரா.முத்தரசன்