நேப்பிடா, நவம்பர் 13 – மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் நேற்று நடைபெற்ற 12-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஏற்படுத்த வருமாறு ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி கூறியதாவது:- “இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, தொழில்மயமாதல் மற்றும் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவுடன் ஆசியான் நாடுகள் கூட்டு வர்த்தகம் ஏற்படுத்த சிறந்த வாய்ப்பாக இத்தருணம் உள்ளது”.
“ஆசியான் நாடுகளுடனான உறவிற்கு நாங்கள் எப்பொழுதும் மதிப்பளிப்போம். இந்தியாவில் புதிய பொருளாதாரப் பாதையை நாங்கள் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் புதிய சூழலில் ஆசியான் நாடுகளுடனான வர்த்தகத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.”
“இதன் காரணமாக இந்தியா-ஆசியான் உறவுகளுக்கான வாய்ப்புகள் பன்மடங்கு பெருகும். இந்த வட்டாரத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதில் ஆசியானுடன் ஒத்துழைக்க இந்தியா ஆர்வமாக உள்ளது.”
“ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளில் ஒவ்வொன்றுடனும் இந்தியா நெருங்கிய இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. அதே முக்கியத்துவத்துடன் ஆசியானுடனான உறவுகளை இந்தியா கருதுகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.