புதுடெல்லி, நவம்பர் 13 – நாடாளுமன்றத்திலும், மேல்–சபையிலும் உறுப்பினராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. தற்போது ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.
இந்த தொகையை ரூ.35 ஆயிரமாக உயர்த்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள். இதில் அவர்கள் ஒரு நாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் ஓய்வூதியம் கிடைக்கும்.
அதே சமயம் 5 ஆண்டுகள் முழுமையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு கூடுதலாக மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் வருடத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைவுக்குப் பிறகு அவர்களது மனைவி மற்றும் விவாகரத்தான மகள் ஆகியோருக்கும் ஓய்வூதிய பலன் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி கூடுதல் செலவாகும். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு மத்திய அமைச்சர் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மந்திரிசபை ஒப்புதல் அளித்ததும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து வந்த கோரிக்கையையடுத்து மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.
ஏற்கனவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக ரெயில்களில் பயணம் செய்யும் போது குளிர்சாதன வசதியில் முதல் வகுப்பில் இலவசமாக பயணம் செய்யும் சலுகை உள்ளது. துணைக்கு ஒருவருடன் பயணம் செய்தால் 2–ம் வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். மேலும் அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் மருத்துவ செலவும் வழங்கப்படுகிறது.