Home நாடு தமிழ்ப் பள்ளிகள் குறித்து அம்னோ மாநாட்டில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? டத்தோ முருகையா கேள்வி

தமிழ்ப் பள்ளிகள் குறித்து அம்னோ மாநாட்டில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? டத்தோ முருகையா கேள்வி

641
0
SHARE
Ad

Murugiah T. Datoகோலாலம்பூர்,  நவம்பர் 13 – தமிழ், சீனப் பள்ளிகள் குறித்து அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஹிஷாமுடின் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடு சுதந்திரம் பெற்றது முதல் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு உள்ள உரிமையையும், பாதுகாப்பையும் நாட்டின் அரசியல் சாசனம் உறுதி செய்து வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை மூடிவிட்டு தேசிய பள்ளிகளை மட்டுமே நடத்துவதன் வழி தேச ஒற்றுமை மென்மெலும் வலுப்பெறும் என்ற கருத்து அபத்தமானது என்றும் அவர் சாடி உள்ளார்.

#TamilSchoolmychoice

“அம்னோ என்பது மலாய்க்காரர்களின் நலன்களைப் பேண உருவாக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சி தொடர்பான கூட்டத்தில் மலாய் மக்களின் மேம்பாடு, வாழ்க்கைத் தரம் குறித்து விவாதிப்பதே சரியாக இருக்கும். மலாய் பள்ளிகளின் எதிர்காலம் குறித்தும் விவாதிக்கிறீர்கள் எனில் அதில் ஆட்சேபம் தெரிவிக்க ஒன்றுமில்லை. ஆனால்,  அதை எல்லாம் விடுத்து தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் குறித்து அம்னோ மாநாட்டில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன?” என முருகையா கேள்வி எழுப்பினார்.

“நாட்டின் அரசியல் சாசனமே இப்பள்ளிகளை நடத்த உரிமை வழங்கியுள்ள நிலையில், அதையும் எதிர்த்து விவாதம் நடத்துவோம் என்று கூறுவது சரிதானா?” என்றும் முருகையா கண்டித்துள்ளார்.

tamil_school_studentsஇதுபோன்ற கருத்துக்களால் மலாய்க்காரர்கள் அல்லாத பிற இனத்தவர்களின் வெறுப்புணர்வை தேசிய முன்னணியும் அரசாங்கமும் சம்பாதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ள அவர், இத்தகைய நிலை ஏற்படுமாயின் அது அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்குப் பாதகமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“பிற இனத்தவர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிக்கத் தயங்கும் நிலை ஏற்படலாம். தமிழ்ப் பள்ளிகளில் படித்த எத்தனையோ பேர் இந்நாட்டிற்காக சேவையாற்றி உள்ளனர். தமிழ்ப் பள்ளியில் படித்த எனக்கும் பிரதமர் துறையின் துணையமைச்சராக மூவின மக்களுக்கும் செயலாற்றும் நல்வாய்ப்பு கிடைத்தது. அப்பணியைப் பிரதமரின் வழிகாட்டுதலுடன் பாரபட்சமின்றி செய்திருக்கிறேன். அப்படியிருக்க, தமிழ்ப் பள்ளிகள் குறித்த வீண் கேள்விகளை சிலர் எழுப்புவது ஏன்?” என்ற கேள்வியை அவர் தனது அறிக்கையில் முன்வைத்துள்ளார்.

“அண்மையில் மசீச மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் சீனப் பள்ளிகள் இந்நாட்டில் தொடர்ந்து இயங்கும் என்ற உறுதிமொழியைத் தந்துள்ளார். அதேசமயம் மலேசியர்கள் ஒவ்வொருவரும் மலாய் மொழி கற்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்த்தியுள்ளார். பிரதமரின் இக்கருத்தே நூறு விழுக்காடு சரியானது. தாய்மொழியில் கல்வி கற்பது ஒருவரது அடிப்படை உரிமை. இதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ இயலாது,” எனவும் முருகையா கூறியுள்ளார்.

அன்வார் இப்ராகிம் மொழிப் பள்ளிகளுக்கு ஆதரவு

Anwar Ibrahimஅண்மையில் பினாங்கில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தமிழுக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தனது ஆதரவு எப்போதும் உள்ளது என்று அறிவித்து இருப்பதையும் முருகையா சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழ், சீனப் பள்ளிகளுக்கு எதிர்க்கட்சிகளே ஆதரவு தெரிவிக்கும் நிலையில், தேசிய முன்னணி இத்தனை ஆண்டு காலம் ஆதரவு காட்டிய ஒரு விவகாரத்தில், இப்போது மட்டும் பிற இனத்தவர்களின் மனம் கோணும்படியான கருத்துக்களை அரசாங்கத்தில் உள்ளவர்களே கூறுவது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக முருகையா கூறியுள்ளார்.

“சீன, தமிழ்ப் பள்ளிகளை மூடிவிட்டால் தேச ஒற்றுமை வலுப்பெறும் என்கிற கருத்து சரியல்ல. மூவின மக்களும் கலந்து வாழும் இந்நாட்டில் இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதை பொறுப்பான பதவியில் உள்ளவர்களும், சமூகப் பொறுப்புள்ளவர்களும் அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய கருத்துக்கள் மூவின மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும். தேச ஒற்றமைக்கும் கேடு விளைவிக்கும்” என்றும் முருகையா வலியுறுத்தியுள்ளார்.

“நாட்டின் ஒவ்வொரு அமைச்சரும் அனைத்து மக்களுக்கும் பணியாற்ற வேண்டியது கடமை. அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும்போது ஒருசிலர் கூறும் தவறான, அடாத கருத்துக்கள் தேசிய முன்னணிக்குப் பங்கம் விளைவிக்கும் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்று ஏற்கெனவே கூறிய கருத்தை மீண்டும் இப்போது வலியுறுத்த விரும்புகிறேன்,” என முருகையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.