ஈப்போ, நவம்பர் 13 – எரிவாயு கொள்கலன்கள் (சிலிண்டர்) ஏற்றி வந்த டிரெய்லர் லோரி நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்ததால் ஈப்போவில் பரபரப்பு நிலவியது. இந்த விபத்தில், லோரியில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் விழுந்து உருண்டோடின.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் நிகழ்ந்ததாக கூட்டரசு போக்குவரத்துத் துறை மூத்த தலைமை உதவி ஆணையர் டத்தோ முகமட் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
“டிரெய்லர் லோரி வடக்கு நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சறுக்கி, கவிழ்ந்தது. பரபரப்பான போக்குவரத்துக்கு மத்தியில் அதிலிருந்த சிலிண்டர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டன.
அப்போது தென்பகுதி நோக்கி வந்த இரு கார்கள் மீது இந்த சிலிண்டர்கள் மோதி வெடித்துச் சிதறின. இதில் ஒரு காரில் தீப்பற்றியது,” என்றார் அப்துல் லத்தீப்.
இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இரு சிறுவர்களும், ஓர் ஆடவரும் அடங்குவர் என கோலகங்சார் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூத்த அதிகாரி அப்துல் கரீம் தெரிவித்தார்.
“இரு சிறுவர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் ஈப்போ மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்,” என்றார் அப்துல் கரீம்.