சென்னை, நவம்பர் 17 – அரசியலுக்கு வருவது தொடர்பில் தனக்கு எந்தவித பயமும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற “லிங்கா” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அரசியல் ரொம்ப ஆழமானது என்றும் தெரிவித்தார்.
நேற்று லிங்கா படத்தின் அதிகாரபூர்வ முன்னோட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொள்ள ரஜினி வந்தபோது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகப் பேசினார் ரஜினி.
“ஒரு படத்தில் நடிப்பது சுலபம். அதேபோல் அரசியலுக்கு வருவதும் சுலபம். ஆனால் வெற்றி பெற வேண்டும் அல்லவா? படப்பிடிப்பு தளத்தில் ரவிக்குமார் என்னை ஒரு குழந்தையைப் போன்று பார்த்துக் கொண்டார். இந்த படத்தை 6 மாதங்களில் முடிக்கக் கூடிய திறமையுள்ள ஒரே நபர் அவர் மட்டும் தான்” என லிங்கா படத்தின் இயக்குநர் கே.எஸ்.இரவிக்குமாருக்கு ரஜினி பாராட்டு தெரிவித்தார்.
“நான் சில விஷயங்களில் தாமதிப்பேன். ஆனால் ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால் டக்கென எல்லாம் செய்வேன். அரசியல் ரொம்ப ஆழம். அரசியலுக்கு வர பயப்படவில்லை, ஆனால் தயங்கிக் கொண்டிருக்கிறேன். நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஏதாவது நடந்தால் நான் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வேன்,” என்று பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் பேசி முடித்தார் ரஜினி.