ஆஸ்திரேலியா, நவம்பர் 18 – இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அணுசக்தி ஒப்பந்த வரைவை, விரைவில் இறுதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, இந்தியாவிற்கு யுரேனியத்தை இறக்குமதி செய்வதை எளிதாக்கும் வகையில் இருநாடுகளுக்கு இடையேயான அணு சக்தி ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்றார்.
இந்தியர்களின் தொழில்ரீதியான பரிந்துரைகளுக்கு விரைவில் அனுமதி கொடுத்து, அதற்கான நடைமுறைகளை ஆஸ்திரேலியா எளிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதன் பின்னர் உரையாற்றிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், “இந்தியாவை பொருளாதார, அறிவுசார்ந்த நாடு என்று புகழந்தார். அறிவியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை இந்தியாவின் வலிமை என்றும் அவர் கூறினார்”.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் இடையிலான அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது, சமூக பாதுகாப்பு, தண்டனை பெற்ற கைதிகளை பரிமாற்றிக்கொள்ளுதல், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் தொடர்பாக ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.