வாஷிங்டன், நவம்பர் 22 – அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 மில்லியன் மக்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்ட திருத்தத்தை அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எச் 1 பி எனும் பணி புரிவதற்கான விசாவில் சென்று அங்கு நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். இவ்வாறு அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையடுத்து, அவர்களை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு சுமார் 1.1 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சட்டவிரோதமாக குடியேறிய 5 மில்லியன் மக்களுக்கு குடியுரிமை வழங்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இது தொடர்பான அமெரிக்க குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஒபாமா அரசின் மிக முக்கிய நடவடிக்கையாக இந்த சட்ட திருத்தம் கருதப்படுகிறது. இதுகுறித்து, அதிபர் ஒபாமா கூறியதாவது:-
“சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ள 1 கோடிக்கும் அதிகமானோரை, வெளியேற்றுவது என்பது, முடியாத காரியம். அதே வேளையில், அது நமது மரபுக்கும் எதிரானது. எதிர்காலத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் ஏற்படாதவாறு, நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நிரந்தரமாக இங்கு தங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுகப்படும். அவர்களின் பங்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.