Home நாடு திரெங்கானுவில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

திரெங்கானுவில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

670
0
SHARE
Ad

Heroin Drugகோல திரங்கானு, டிசம்பர் 7 – 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை திரங்கானு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆண்டு அம்மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களில் இதுவே அதிக மதிப்புடையது.

இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை கம்போங் புக்கிட் துங்கால் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இரு ஆடவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களது காரை சோதனையிட்டதாக மாநில காவல்துறை தலைவர் டத்தோ ஜம்ஷா முஸ்தபா தெரிவித்தார்.

“காருக்குள் கண்டெடுக்கப்பட்ட 100 சிறிய போத்தல்களில் வெள்ளை நிற பவுடர் நிரப்பப்பட்டிருந்தது. இந்த போத்தல்களை ஒரு காகித பைக்குள் வைத்து, கார் இருக்கையின் கீழே மறைத்து வைத்திருந்தனர். இது தொடர்பாக அக்காரில் வந்த 37 மற்றும் 24 வயதுடைய ஆடவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

“இருவருக்கும் போதை மருந்து பழக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் போதை மருந்து தொடர்பான குற்றங்களிலும் இவர்கள் ஏற்கெனவே சம்பந்தப்பட்டுள்ளனர். ஹெராயின் என்று நம்பப்படும், பறிமுதல் செய்யப்பட்ட அந்த போதைப் பொருளின் எடை 568 கிராம் ஆகும். அதன் தற்போதைய சந்தை மதிப்பு 50 ஆயிரம் வெள்ளி என கணக்கிடப்பட்டுள்ளது,” என்றார் ஜம்ஷா.

அண்டை நாட்டிலிருந்து இந்த போதைப் பொருள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், கைது செய்யப்பட்ட ஆடவர்கள் போதைப் பொருளை கைமாற்றிவிட காத்திருந்தபோது தங்களிடம் சிக்கி இருக்கலாம் எனத் தெரிவித்தார்.