Home இந்தியா பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக – வைகோ அறிவிப்பு

பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக – வைகோ அறிவிப்பு

615
0
SHARE
Ad

சென்னை, டிசம்பர் 9 – பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திங்கட்கிழமை அறிவித்தார். தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைப்பதால் பாஜக கூட்டணியில் இனியும் நீடிக்க முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாகவே வைகோவுக்கும் தமிழக பாஜக பிரமுகர்களுக்கும் இடையே உரசல் நீடித்து வந்தது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து வந்த வைகோ, அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியையும் ஒருமையில் குறிப்பிட்டு சாடினார்.

vaiko.jpg,
வைகோ

இதையடுத்து வைகோவுக்கு நாவடக்கம் தேவை என்றும், மோடியை தொடர்ந்து விமர்சித்தால் அவரால் தமிழகத்தில் பாதுகாப்பாக நடமாட முடியாது என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்தார். இதன் பிறகு இரு தரப்புக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்தது.

#TamilSchoolmychoice

இந்த சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியும் வைகோவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார். எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கான கூட்டணி அமைக்கும் கலைஞரின் வியூகத்தின் முதல் கட்டம் இதுவென அரசியல் பார்வையாளர்கள் வர்ணித்துள்ளனர்.

இந்நிலையில் மதிமுக மாவட்ட செயலர்கள் மற்றும் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகுவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்திச் சென்றபோது, கூட்டணி கட்சிகளிடம் அவர்கள் காட்டிய அணுகுமுறை, தற்போது நரேந்திர மோடி தலைமையிலான பாஜ கூட்டணியில் இல்லை என்றார்.

“மத்திய அரசு கொலைகார சிங்கள அரசை உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. எனவே பாஜகவுடன் கூட்டணியைத் தொடர முடியாது,” என்று வைகோ மேலும் தெரிவித்தார்.