Home நாடு இரு ‘தலை’களுக்கு இடையில் – இக்கட்டான சூழலில் – சிறப்பாகவே செயல்படும் தலைமைச் செயலாளர் பிரகாஷ்...

இரு ‘தலை’களுக்கு இடையில் – இக்கட்டான சூழலில் – சிறப்பாகவே செயல்படும் தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ்!

658
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 9 – வெள்ளிக்கிழமை (5 டிசம்பர்) மாலை சங்கப் பதிவதிகாரியின் கடிதம் மஇகா தலைமையகத்தை அடைந்து விட்டது என்ற தகவல் பரவத் தொடங்கியது முதல் கட்சியில் உருளத் தொடங்கிய ஒரு முக்கிய ‘தலை’ யாருடையது என்றால், கட்சியின் தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ்வின் தலைதான் அது!

அந்தக் கடிதத்தில் என்ன முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது என பத்திரிக்கையாளர்கள் ஒரு பக்கம் முற்றுகையிட – மறு தேர்தல் உண்டா என நாடு முழுமையிலும் இருந்து மஇகா தலைவர்கள் நச்சரிக்க – தேசியத் தலைவர் வேறு நாட்டில் இல்லை என்ற நிலைமையில் – அனைவரின் பார்வையும் ஒரு சேரப் பதிந்தது பிரகாஷ் ராவ் மேல்தான்!

A-Prakash-Rao1
மஇகா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ்

கட்சியின் மத்தியசெயற்குழு உறுப்பினராக கடந்த ஆண்டு கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரகாஷ் ராவை, 2013 ஆண்டுப் பொதுப் பேரவைக்குப் பின்னர் தலைமைச் செயலாளராக நியமித்தார் தேசியத் தலைவர் ஜி.பழனிவேல்.

#TamilSchoolmychoice

அப்போது முதல், கட்சித் தலைவர்களிடையே, இனிய சிரித்த முகத்துடனும், பண்பாகவும், அனைவருக்கும் மரியாதை கொடுத்துப் பேசும் பழக்க வழக்கங்களால் அனைவரையும் கவர்ந்து வந்த பிரகாஷ் ராவுக்கு வெள்ளிக்கிழமை முதல் சங்கப் பதிவதிகாரியின் கடித உருவத்தில் தலையிடி தொடங்கியது.

MIC logoடிசம்பர் 5 தேதியிட்ட ஒரு தமிழ் நாளிதழில் மஇகாவில் மீண்டும் மறுதேர்தல் இல்லை என்ற ஒரு செய்தி வெளியானதுதான் சங்கப் பதிவகத்தை விரைவாகச் செயல்பட வைத்தது என மஇகா வட்டாரங்களில் ஒரு சில தெரிவித்தன.

செய்தியைப் பார்த்ததும் மறுதேர்தல் கோரி வந்த போராட்டக் குழுவினர் சங்கப் பதிவகத்தை முற்றுகையிட, அன்று மாலையே சங்கப் பதிவதிகாரியின் கடிதத்தை எடுத்துக் கொண்டு மஇகா தலைமையகத்தில் சமர்ப்பித்தனர் சங்கப் பதிவக அதிகாரிகள்.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை காலை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமிடியும், சங்கப் பதிவதிகாரியும் பிரதமரைச் சந்தித்து மஇகா மறுதேர்தல் குறித்த தங்களின் விளக்கத்தை அளித்தனர் என்கிறது மற்றொரு தரப்பு.

வெள்ளிக்கிழமை மாலை சங்கப் பதிவக அதிகாரிகள் கடிதம் சமர்ப்பிக்க மஇகா தலைமையகம் வந்தபோது அங்கு துணையமைச்சர் டத்தோ சரவணனும் தனது குழுவினரோடு காத்திருந்தார். இதன் காரணமாக, கடிதம் வழங்கப்பட்ட விவரத்தை அனைவருக்கும், தலைமைச் செயலாளர் என்ற முறையில் பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பிரகாஷ் ராவ்.

Dr-S.-Subramaniam
டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்

மறுநாள் சனிக்கிழமை பிரகாஷ் ராவ் காலை 11 மணிக்கு பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பார் என முதலில் அறிவிப்பு வெளியானது. பின்னர் அந்த சந்திப்பு பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை முன்னின்று நடத்த தேசியத் துணைத் தலைவரான டாக்டர் சுப்பிரமணியமே நேரடியாக சனிக்கிழமை பிற்பகல் மஇகா தலைமையகம் வந்தடைந்தார்.

கட்சியில் கடந்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையின் தேர்வு செல்லாது என்ற சங்கப் பதிவகத்தின் கடிதத்தால் விளைந்த குழப்பம் – நாட்டில் தேசியத் தலைவர் இல்லாத சூழ்நிலை – ஆகியவற்றால் –

அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தேசியத் துணைத் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தனது பொறுப்பை – கடமையை ஆற்ற – முன்வந்தார்.

அவ்வாறே பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்கப் பதிவக கடிதத்தின் விவரங்களை, தலைவர் நாட்டில் இல்லாத காரணத்தால், இடைக்காலத் தேசியத் தலைவர் என்ற முறையில், தான் அறிவிப்பதாக டாக்டர் சுப்ரா பகிரங்கமாகவே பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

இதில் பிரகாஷ் ராவ் தலையிடுவதற்கோ, தேசியத் துணைத் தலைவருடனோ அல்லது மற்ற தலைவர்களுடனோ கூட்டுச் சதியில் ஈடுபடுவதற்கோ ஒன்றுமில்லை.

தலைமைச் செயலாளர் பதவி என்பது  ஒரு கட்சியின் அதிகாரபூர்வ தொடர்பாளர் பதவி.

தன்னை நியமித்த தேசியத் தலைவருக்கு விசுவாசம் காட்டுவது ஒரு புறமிருக்க,

அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய பொறுப்புணர்வும்,

கட்சியின் கிளை, தொகுதி பொறுப்பாளர்களுடன் உரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கடப்பாடும்,

subra-and-palaniஉரிய விவரங்களை பத்திரிக்கைகளுக்கு அறிவிக்க வேண்டிய கடமையும் ஒரு தலைமைச் செயலாளருக்கு உண்டு.

இதில் கூட்டுச் சதி என்ற பேச்சுக்கும் இடமில்லை. “அவசரம் அவசரமாக ஏன் வெளியிட வேண்டும்” என்ற குதர்க்க வாதமும் நியாயமில்லை. அப்படியென்றால் இந்த விவகாரத்தை மூடி மறைப்பதுதான் நியாயமா?

ஓராண்டு காலமாக இந்திய சமுதாயமும், கட்சியும், காத்திருந்த ஒரு முடிவை – அரசாங்க இலாகா ஒன்றின் அதிகாரபூர்வ கடிதத்தின் உள்ளடக்கங்களை – வெளியிடுவது – அதுவும் கட்சியின் துணைத் தலைவர் மூலமாகவே வெளியிடுவதில் கூட்டுச் சதி என்ற குற்றச் சாட்டு அபத்தமானது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையின் தேர்தலே செல்லாது என்னும்போது,  “எந்த” மத்திய செயலவையை பிரகாஷ் ராவ் அவமதித்தார்? குற்றம் சாட்டுபவர்கள் விளக்குவது நல்லது!

சங்கப் பதிவகத்தின் கடித விவகாரத்திலும், அதன் பின்னர் அடுத்தடுத்து  நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போதும், ஒரு தலைமைச் செயலாளருக்குரிய பொறுப்புணர்வுடனும், கடமையுணர்வுடனும்,  பொறுமையுடனும், கட்சி சார்புடனும் பிரகாஷ் ராவ் நடந்து கொண்டுள்ளார் என்பதுதான் பெரும்பான்மை மஇகாவினரின் முடிவாகும்.