புதுடெல்லி, டிசம்பர் 13- சியாவுமி நிறுவனம் இந்தியாவில் தனது திறன்பேசிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிக்சன் நிறுவனத்தின் காப்புரிமை மீறப்பட்ட விவகாரத்தில், டெல்லி உயர் நீதிமன்றம் சியாவுமிக்கு எதிராக இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது.
எரிக்சன் நிறுவனம் காப்புரிமை பெற்ற ஒரு குறிப்பிட்ட தொழில் நுட்பத்தை அந்நிறுவனத்தின் அனுமதியின்றி, தனது தயாரிப்புகளில் சியாவுமி பயன்படுத்தி உள்ளது. இது குறித்த முறையான விளக்கத்தையும் சியாவுமி அளிக்காததால், காப்புரிமை மீறப்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது எரிக்சன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில், சீனாவின் சியாவுமி இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்யவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய சுங்கத் துறைக்கும் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த தடை குறித்து சியாவுமியின் இந்தியப் பிரிவுத் தலைவர் மனு குமார் ஜெயன் கூறுகையில், “எங்கள் நிறுவனம், இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து வருகின்றது. ஆசிய அளவில் எங்கள் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் மிக முக்கியமான ஒன்று. அதனால் இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கிய சியாவுமி, நாளுக்குநாள் பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து, இணைய வர்த்தகத்தின் மூலம், ரெட்மி 1எஸ் மற்றும் ரெட்மி நோட் திறன்பேசிகளை விற்பனை செய்து வரும் நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தடை அந்நிறுவனத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.