நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கேஎல்ஐஏ 1 வளாகத்தில் திரண்டு வரும்படி மஇகா உறுப்பினர்களுக்கு கைத்தொலைபேசிகளிலும், குறுஞ்செய்திகளின் வழியும் அழைப்புகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் மஇகா வட்டாரங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
மஇகாவுக்கு மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமென சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தேர்தல் குழுவின் தலைவராகப் பணியாற்றிய பழனிவேல் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென நாடெங்கிலும் அறைகூவல்கள் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நாடு திரும்பும் பழனிவேல், நாடு திரும்பியவுடன் பல தலைவலியான முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்.
பழனிவேல் முன் நிற்கும் பிரச்சனைகள்
நாடு திரும்பியவுடன் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமென சங்கப் பதிவதிகாரி விடுத்துள்ள முடிவு குறித்து தான் இறுதி முடிவு எடுக்கப் போவதாக வெளிநாட்டில் இருந்தவாறு பழனிவேல் அறிவித்திருந்தார்.
இருப்பினும், சங்கப் பதிவகத்தின் முடிவினை ஏற்றுக் கொண்டு மீண்டும் மஇகாவுக்கு தேர்தல் நடத்தும் முடிவைத்தான் அவர் மேற்கொள்வார் என அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவரது ஆதரவாளர்களில் ஒரு சிலர் சங்கப் பதிவகத்தின் முடிவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், அதனை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் அவரை வற்புறுத்தி வருகின்றார்கள் என்றும் அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஓர் அமைச்சராக இருக்கின்ற காரணத்தால், அவரே, ஓர் அரசாங்க இலாகாவின் முடிவை எதிர்ப்பது என்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதோடு, பிரதமர் நஜிப்பும் இத்தகைய முடிவை விரும்பமாட்டார் என்பதால் இதுபோன்ற கடுமையான முடிவை எடுக்க பழனிவேல் தயங்கலாம்.
மஇகா, தேசிய முன்னணியின் ஓர் உறுப்பியக் கட்சி என்பதால், தேசிய முன்னணி தலைவரான பிரதமர் நஜிப்பின் ஒப்புதலோடுதான் சங்கப் பதிவதிகாரி இத்தகைய கடுமையான முடிவை எடுத்திருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. சங்கப் பதிவகத்தின் முடிவை அறிவிக்கும் கடிதம் மஇகா தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட டிசம்பர் 5ஆம் தேதி காலை, சங்கப் பதிவதிகாரி உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமிடியுடன் பிரதமரைச் சந்தித்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நாடு திரும்பியவுடன் அடுத்த கட்ட முடிவுகளை எடுப்பதற்கு முன்னால் பழனிவேல் பிரதமரைச் சந்தித்து ஆலோசனைகள் பெறக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பழனிவேலுவுக்கு இருக்கும் மற்றொரு சிக்கல் – புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை செல்லாது என்ற முடிவால் – கடந்த ஓர் ஆண்டு காலமாக அந்த மத்திய செயலவை எடுத்திருந்த அத்தனை முடிவுகளும் செல்லாதது என்ற நிலைமையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால், பல மத்திய செயலவை முடிவுகளை அவர் மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நாடு திரும்பும் அவருக்கு இன்னும் கட்சியில் ஆதரவு இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காக அவரது ஆதரவாளர்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நாளை பிற்பகல் திரள்வதற்கு முடிவு செய்துள்ளனர்.
பழனிவேலுவின் முடிவினைத் தெரிந்து கொண்ட பின்னரே, எத்தகைய அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குவது என்பதை முடிவு செய்ய இயலும் என்பதால் மஇகாவின் பல்வேறு தரப்பினரும் தற்போது அவரது வருகைக்காகவும், அவரது வாய்மொழிக்காகவும் காத்திருக்கின்றனர்.