Home தொழில் நுட்பம் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்றது சியாவுமி: பிப்ரவரி 5 வரை இந்தியாவில் விற்பனை இல்லை!

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்றது சியாவுமி: பிப்ரவரி 5 வரை இந்தியாவில் விற்பனை இல்லை!

604
0
SHARE
Ad

புது டெல்லி, டிசம்பர் 14 – சியாவுமி நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து, தற்காலிமாக தங்கள் திறன்பேசிகளின் விற்பனையை இந்தியாவில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்  எரிக்சன் நிறுவனம், சியாவுமிக்கு எதிராக காப்புரிமை மீறப்பட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சியாவுமி மற்றும் அந்நிறுவனத்தின் திறன்பேசிகளை விற்பனை செய்து வரும் ஃபிலிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் ‘ரெட்மி 1எஸ்’ (Red Mi 1S) மற்றும் ‘ரெட்மி நோட்’ (Red Mi Note) ஆகிய திறன்பேசிகளை விற்பனையோ, இறக்குமதியோ அதற்கான விளம்பரமோ செய்யக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

xiaomi_redmi_note_official-630x460

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, இந்த தடை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சியாவுமி இந்தியப் பிரிவின் தலைவர் மனு ஜெயின் கூறியதாவது:-

“இதுவரை இந்த தடை உத்தரவு தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள், இன்னும் எங்களுக்கு வரவில்லை. எனினும், இந்த தடை உத்தரவு பற்றி எங்களுக்கு தெரியும் என்பதால்,  பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வரை இந்தியாவில் எங்கள் நிறுவன திறன்பேசிகளை விற்பனை செய்ய மாட்டோம். இந்தியாவின் சட்ட திட்டங்களை 100 சதவீதம் பின்பற்றத் தயாராக உள்ளோம்.”

“இந்த வழக்கு தொடர்பாக எங்கள் நிறுவனத்தின் சட்டக் குழு அனைத்து சாதக அம்சங்களையும் ஆராய்ந்து வருகின்றது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும். இந்த வழக்கின் அனைத்து தகவல்களையும் எங்கள் பயனர்களிடமும் தெரிவிக்க தயாராக உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

“இந்திய வர்த்தகம் எங்கள் நிறுவனத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதன் காரணமாக, இந்த தடையை சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு விரைவில், வெற்றி பெறுவோம்” என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஹுகோ பெர்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கிய சியாவுமி, நாளுக்குநாள் அசுர வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. அந்நிறுவனத்தின் திறன்பேசிகளை பெறுவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 150,000 பேர் வரை ஃபிலிப்கார்ட் எனப்படும் இணைய விற்பனைத் தளத்தில் முன்பதிவு செய்து இருந்த நிலையில் இந்த தடை உத்தரவு அந்நிறுவனத்தின் ஒரு காலாண்டு வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.