ஜாகர்த்தா, டிசம்பர் 29 – காணாமல் போன ஏர் ஆசியா விமானங்களின் பாகங்கள் இன்னும் கண்டெடுக்கப்படவில்லை என இந்தோனேசிய துணை அதிபர் ஜுசுப் கல்லா தெரிவித்துள்ளார். நங்கா தீவு அருகே கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் அல்ல என்றார் அவர்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்தோனேசியாவுடன் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இணைந்துள்ளன. தற்போது 13 கப்பல்கள் மற்றும் 15 விமானங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ஜாவா கடற்பகுதியில், நங்கா என்ற தீவின் அருகே விமானப் பாகங்கள் காணப்படுவதாக மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழு தெரிவித்தது. ஆனால் அவை காணாமல் போன விமானத்தின் பாகங்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என துணை அதிபர் ஜுசுப் கல்லா தெரிவித்தார்.
“தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு எதையும் தற்போது சொல்வதற்கில்லை,” என்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
அப்போது உடனிருந்த ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், தற்போதைய சூழலில் விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை அனுமானிக்க இயவில்லை என்றார்.
“விமானத்தைக் கண்டுபிடிக்கும் வரை எத்தகைய முடிவுக்கும் வர விரும்பவில்லை. என்ன தவறு நேர்ந்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அதன் பிறகு தேவைப்பட்டால் எங்களை மேம்படுத்திக் கொள்வோம். ஆனால் யூகங்கள் தொடர்பாக எதுவும் சொல்ல விரும்பவில்லை,” என்றார் டோனி பெர்னாண்டஸ்.
காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தில் இருந்த பயணிகளின் உறவினர்களுடன் கலந்து உரையாடும் டோனி பெர்னாண்டஸ்…
படங்கள்: EPA