ஜாகர்த்தா, ஜனவரி 10 – கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து மீட்புக்குழுவினர் ஒலிக்குறிப்புகளை பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கருப்புப் பெட்டி விரைவில் மீட்கப்படும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி ஏர் ஆசியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 162 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். விமான விபத்துக்கான காரணம் அதன் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடித்தால் மட்டுமே தெரியவரும். இதையடுத்து முதலில் விமானத்தைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.
பல நாள் நீடித்த தேடுதல் வேட்டையில், விமானத்தின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தின் இப்பகுதியில்தான் கருப்புப் பெட்டியும் இருக்கும். ஆனால் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்த விமான வால் பகுதியில் கருப்புப் பெட்டி காணப்படவில்லை.
எனினும் வால்பகுதி கிடைத்த இடத்தில்தான் கருப்புப் பெட்டியும் இருக்கக்கூடும் என கருதப்பட்டது. எனவே ரிமோட் மூலம் இயக்கப்பட்டு, கடலுக்குள் சென்று புகைப்படம் எடுக்கும் கருவியை வைத்து இந்தோனேசிய மீட்புக் குழுவினர் மற்றும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடி வந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளானது முதல் அதன் கருப்புப் பெட்டியிலிருந்து எந்தவிதமான ஒலிக்குறிப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால் விமானத்தின் வால் பகுதி கிடைத்த இடத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை காலை முதல் கருப்பு பெட்டியிலிருந்து வரும் ஒலிக்குறிப்புகளைப் பெற முடிந்தது என இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அழ்கடல் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற முக்குளிப்பு நீச்சல் வீரர்கள் ஒலிக்குறிப்பு வந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
விமானத்தின் அனைத்து நிகழ்வுகளும் பதிவாகி இருக்கும் முக்கிய பாகமான கருப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே ஒரு விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது தெரிய வரும். கருப்பு பெட்டியின் ஆயுட்காலம் 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.