மபுடோ, ஜனவரி 13 – தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பிய ஏராளமானோர் அடுத்தடுத்து மரணமடையத் தொடங்கினர். நூற்றுக்கணக்கானோருக்கு கடுமையான வயிற்று உபாதைகள் ஏற்பட்டன.
அந்நாட்டு அரசு உடனடியாக மேற்கொண்ட விசாரணையில், துக்க நிகழ்ச்சியின் இறுதி காரியங்கள் முடிந்ததும் வழங்கப்பட்ட உற்சாக பானம் (பீர்), விஷமாக மாறியது கண்டறியப்பட்டது.
மொசாம்பிக் நாட்டில் விழாக்காலத்தின் போது போம்பே எனும் உற்சாக பானம் பாரம்பரியமாக தயாரிக்கப்படும். மொசாம்பிக்கின் மத்திய பகுதியில் உள்ள சிட்டிமா கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியின் இறுதியில், வந்திருந்தவர்களுக்கு போம்பே பானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பலர் தொடர்ச்சியாக மரணித்தனர். சுமார் 169 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த அந்தப் பகுதியின் சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், பலரின் மரணத்திற்கு போம்பே உற்சாக பானத்தில் சேர்க்கப்பட்ட முதலையின் பித்த நீர் காரணம் என்று கண்டறியப்பட்டது.
மேலும் அந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால், பானத்தின் மாதிரிகள் மற்றும் இறந்தவர்களின் இரத்த மாதிரிகள் தலைநகர் மபுடோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.