சவுத் ஹேம்டன் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று புதன்கிழமை தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கக் குழுவோடு மோதிய இந்தியா வெற்றி பெற்று, தனது இரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டியது.
இந்த முறை வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் நிலவுகிறது.
நாணயத்தை சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை எதிர்கொண்டு பேட்டிங் செய்ய தேர்ந்தெடுத்தது. 50 ஓவர்கள் முடிந்த நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை எடுத்தது தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்கா 100 ஓட்டங்கள் எடுப்பதற்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக பந்து வீசியது இந்திய அணி.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய இந்தியா 47.3 ஓவர்களிலேயே 230 ஓட்டங்களை எடுத்து, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.
இதனைத் தொடர்ந்து 6 விக்கெட்டுகள் பெரும்பான்மையில் இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு பேட்டிங் செய்ய முதல் விளையாட்டாளராக (ஓபனிங் பேட்ஸ்மேன்) களமிறங்கிய ரோஹிட் ஷர்மா ஆட்டத்தின் இறுதி வரையில் எந்த விக்கெட்டுகளையும் இழக்காமல் அபாரமாக விளையாடி 122 ஓட்டங்கள் எடுத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார்.