பிரிடோரியா : தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரப் போராளியாக வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து ஒருகாலத்தில் போராடியவர் ஜேக்கப் சுமா.
நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான ஆப்பிரிக்கா தேசியக் காங்கிரசில் இணைந்து வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்களில் ஒருவர். அதற்காக சிறைவாசம் அனுபவித்தவர். நாடு கடத்தப்பட்டவர்.
வெள்ளையரின் நிறவெறி ஆட்சி ஒரு முடிவுக்கு வந்து, சிறையிலிருந்து வெளியான நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபரானார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவர் பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து மற்ற ஆப்பிரிக்கக் காங்கிரஸ் தலைவர்கள் அதிபர்களாகி தென் ஆப்பிரிக்காவை ஆட்சி செய்தனர்.
2007 முதல் 2017 வரை ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் தலைவராகவும் பதவி வகித்தார் ஜேக்கப் சுமா.
2009 முதல் 2018 வரை தென் ஆப்பிரிக்காவின் அதிபராகவும் பதவி வகித்தார்.
அவரின் ஆட்சிக் காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்மீது எழுந்தன. நான்கு மனைவிகளைக் கொண்டவர், ஏராளமான காதலிகளைக் கொண்டவர் என்ற குறைகூறலும் அவர் மீது உண்டு.
ஒருமுறை அவர் மீது பாலியல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
அவர் மீதான எதிர்ப்புகள் அதிகரிக்க ஒரு கட்டத்தில் அதிபர் பதவியிலிருந்து விலகினார் ஜேக்கப் சுமா. அதைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் வழக்குகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததற்காக அவருக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக 15 மாத சிறைத் தண்டனை கடந்த வாரம் வழங்கப்பட்டது.
அந்தத் தண்டனையை ஏற்காமல் ஜேக்கப் சுமா தவிர்த்து வந்தார். எனினும் கடந்த புதன்கிழமை (ஜூலை 7) அவர் அரசு தரப்பிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து 79 வயதான ஜேக்கப் சுமா 15 மாத சிறைவாசத்தை இனி அனுபவிப்பார்.
தென் ஆப்பிரிக்க வரலாற்றில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் முதல் முன்னாள் அதிபராக ஜேக்கப் சுமா திகழ்கிறார்.
ஒருகாலத்தில் சுதந்திரப் போராளி. பின்னர் நாட்டின் அதிபர். இன்று 79-வது வயதில் சிறைவாசம் என்ற சோக முடிவுக்கு வந்திருக்கும் சுவாரசிய வாழ்க்கையைக் கொண்டவர் ஜேக்கப் சுமா.