கோலாலம்பூர் : துன் மகாதீர் இன்று சனிக்கிழமை ஜூலை 10-ஆம் தேதி தனது 96-வநு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும், நண்பர்களும் சமூக ஊடகங்களில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் ம் வேளையில் அவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தனது பிறந்த நாள் விருப்பம் மலேசியா விரைவில் வளர்ந்த நாடு என்ற நிலையை அடைவதுதான் என மகாதீர் தெரிவித்துள்ளார். இத்தனை வயதிலும் நாட்டிற்கும், தனது இனத்திற்கும், சமயத்திற்கும் சேவையாற்ற கிடைத்த வாய்ப்புக்கும் மகாதீர் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
96-வது வயதில் ஏற்கனவே பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மகாதீர் திகழ்கிறார். இரண்டு முறை பிரதமர், உலகிலேயே அதிக வயதான பிரதமர் என பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்.
இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரலாம் என்ற ஆரூடங்கள் நிலவும் வேளையில் மகாதீர் மீண்டும் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே, மலேசிய வரலாற்றில் மிக முதிர்ந்த வயது கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனை மகாதீருக்கே உரியதாகும். இப்போது தனது 96-வது வயதில் அவர் மீண்டும் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காக்க முன்வந்தால் அது இன்னொரு சாதனையாகப் பதிவு செய்யப்படும்.
மகாதீர் தலைமையிலான பெஜூவாங் கட்சிக்கான பதிவு தற்போது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.