சென்னை : தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவராகச் செயல்பட்டு வந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக கடந்த புதன்கிழமை (ஜூலை 7) நியமிக்கப்பட்டார் .
அதைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க-வின் புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் காவல் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவில் ஒரு சிறந்த தலைமைத்துவ நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற நடைமுறைதான் அது. எனவே, கட்சித் தலைவராக இருந்த எல்.முருகன் அமைச்சராகி விட்டதால், பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அண்ணாமலையைத் தமிழகத் தலைவராக நியமித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை பா.ஜ.க-வின் வேட்பாளராகப் போட்டியிட்டார். எனினும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேலே தோல்வியடைந்தார்.
கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே அவருக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டிருப்பது பாஜக வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற கட்சிகளோ அவரின் நியமனத்தை கொங்கு நாடு பின்னணியில் பார்க்கிறார்கள்.
ஏற்கனவே, கொங்கு வட்டாரத்தில் வலுவான ஆதரவுத் தளத்தை பாஜக கொண்டிருப்பதால், புதிய தலைவரும் அந்தப் பகுதியில் இருந்து நியமிக்கப்பட்டால், அதன் மூலம் தங்களின் ஆதரவை அந்தப் பகுதியில் மேலும் வேரூன்றச் செய்ய பாஜக திட்டமிட்டிருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஒரு வருடத்திலேயே தனது அதிரடி நடவடிக்கைகளாலும், மேடைப் பேச்சுகளாலும் தமிழகத்தை அதிரவைத்த காரணத்தினால்தான் அண்ணாமலைக்கு 36 வயதிலேயே மாநிலத் தலைமைப் பொறுப்பு கிடைத்திருக்கிறது எனப் பலர் கருதுகின்றனர்.