Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘ஜ’ – பார்த்து ரசிக்க வேண்டிய கொள்ளை அழகு!

திரைவிமர்சனம்: ‘ஜ’ – பார்த்து ரசிக்க வேண்டிய கொள்ளை அழகு!

1004
0
SHARE
Ad

i vikramஜனவரி 14 – கிரேக்க வரலாற்றில் ‘நார்சிசம்’ என்ற கதை ஒன்று உள்ளது. அதாவது தன் அழகை தானே  கண்டு ரசிப்பதும், அதனை அளவுக்கு அதிகமாகக் காதலிப்பதும் ஆகும்.

அன்றைய காலத்தில் வாழ்ந்த ‘நார்சிசஸ்’ என்ற மனிதன் ஒருவன், நதி நீரில் தெரியும் தனது பிம்பத்தையும், குகையில் எதிரொலிக்கும் தனது குரலையும் அளவுக்கு அதிகமாகக் காதலித்தானாம். ஒருநாள் பெண் ஒருத்தி விட்ட சாபத்தின் விளைவாக அந்த அழகு இல்லாமல் போன போது தன்னைத் தானே அழித்துக் கொண்டானாம். இப்படியாக கிரேக்க வரலாறு கூறுகின்றது.

இந்த வரலாற்றுக் கதைக்கும், நேற்று சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ஐ’ படத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். ஒரு தொடர்பும் கிடையாது.

#TamilSchoolmychoice

ai-movie-galleryஇந்த கதையை கூறவந்தது எதற்காக என்றால், இன்றைய காலத்திலும் இளைஞர்களிடையே செல்ஃபி என்ற பெயரில் ‘நார்சிசம்’ உலகெங்கும் பரவிக் கிடக்கத்தான் செய்கின்றது. செல்பேசி வழியாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொண்டு அதை ரசிப்பதும், பேஸ்புக்கில் பதிவு செய்வதும் வாடிக்கையான விசயம். முகத்தில் ஒரு சின்ன பரு வந்தால் கூட இமையமலையாகத் தெரிந்து இன்றைய இளசுகளை அழகு ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கின்றது.

அப்படிப்பட்ட அழகிற்கு, முற்றிலும் சிதையும் அளவிற்கு ஆபத்து வருகிறது என்றால் சாதாரண மனிதர்களுக்கே அது சாவு மணி அடிப்பது போல் தோன்றும் போது, உலகையே தன் அழகால் வசியம் செய்து வைத்திருக்கும் ஒரு சூப்பர் மாடலுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.

அது தான் ‘ஐ’ படத்தின் கதை. ஆனால் அந்த அழகு உருக்குலைந்து போனதற்கான காரணம் என்ன? அதற்கு பின்னணியில் நடக்கும் நம்பிக்கை துரோகங்கள் என்ன? போன்றவற்றை தனக்கே உரிய பிரம்மாண்டமான, ஸ்டைலிசான பாணியில் படைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

இயக்கத்திற்கு ஷங்கர் + ஒளிப்பதிவிற்கு பி.சி.ஸ்ரீராம் + இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூன்று ஜாம்பவான்களில் கூட்டணி என்றால் கேட்கவா வேண்டும். படம் பார்ப்பவர்களை சும்மா “மெர்சலாக்குது பா”…

நடிப்பு:

படத்தில் பெரும்பாலான காட்சிகளில் மாற்றி மாற்றி சீயான் … எமி…. சீயான்….எமி ஆகிய இருவரின் அழகு போதும் போதும் என்று சொல்லப்படும் அளவிற்கு காட்டப்பட்டுள்ளது.

vikram-amy-jackson,

விக்ரம் உடல் எடையைக் கூட்டி, குறைத்து… பாடிபில்டர், மாடல், ஒல்லிப்பச்சான், கூனன் என தோற்றங்களில் வித்தியாசங்களைக் காட்ட பெரும்பாடு பட்டிருக்கின்றது நன்றாகத் தெரிகின்றது.

ஆணழகன் போட்டி என்ற பெயரில், நிஜ பாடிபில்டரான மிஸ்டர் இந்தியா காமராஜுடன் மோத விட்டிருக்கிறார்கள். பாவம் மனிதர் அதையும் தாக்குப் பிடித்து மேடையில் உள்ளாடையுடன் நின்று, இசைக்குத் தகுந்தாற் போல் உடலை வளைத்து நெளித்து சாகசம் செய்திருக்கிறார்.

மார்பு, கைகள், வயிற்றுத்தசை என உடலில் அங்குலம் அங்குலமாக வளர்ச்சி காட்ட வேண்டிய ஒரு கடினமான ‘மிஸ்டர் தமிழ்நாடு’ போட்டியில் ‘அப்பர் பாடியை’ மட்டும் கொஞ்சம் இறுக்கி, மிஸ்டர் இந்தியா காமராஜுடன் மோதி இறுதியில் ஒட்டுமொத்த டைட்டிலையும் விக்ரம் ஜெயித்து விடுகிறார்.

‘டெபனிசன்… நல்லா இருக்கு…” என்று கூறி பட்டத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்…. சரி … அதை விடுங்க ஷங்கர் படமாக இருந்தாலும், ஹீரோ… ஹீரோ தானே….

அப்பாவி வட சென்னை இளைஞனாக, சூப்பர் மாடல் எமியை ரசிப்பதும், அவரின் விளம்பரப் படங்களை வீட்டில் சேகரிப்பதும்… “ஹையோ…. இன்னாங்க இது … மெய்யாலுமா சொல்றீங்க….” என்று ஏமியிடம் சென்னைத் தமிழில் ஆச்சரியமாகக் கேட்பதுமாக விக்ரம் வாழ்ந்திருக்கிறார்.

Vikram-I-Movie-Stills

கூனன் கதாப்பாத்திரத்தில் முகமே அருவருக்கத்தக்க வகையில் குரூரமாக சிதைந்து போயிருந்தாலும், அந்தக் கண்களில் வழியும் கண்ணீரிலும், முகபாவனைகளிலும் விக்ரம் நமது நெஞ்சைத் தொட்டு நனைக்கின்றார்.

படத்தின் இன்னொரு அழகு…. எமி ஜாக்சன் …. அப்பப்பா… என்ன அழகு… எங்கோ ஒரு வெளிநாட்டில் பிறந்த இந்த அழகியை தமிழுக்குக் கொண்டு வந்த ‘மதராசப்பட்டினம்’ விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

அந்த கண்களை உறுத்தாத, முகம் சுளிக்க வைக்காத அழகை, ‘ஐ’ படத்தின் மூலமாக மேலும் அழகாகக் காட்டி நம் கண்களை மேலும் அகல விரித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். நடை, உடை, முகபாவனைகள், கண்ணீர் என நடிப்பில் கவர்ந்து இழுக்கிறது இந்த 23 வயசுப் பொண்ணு…

சந்தானம்… படம் முழுவதும் விக்ரம் கூடவே வந்து அவரை கலாய்ப்பது மட்டுமில்லாமல் ஹீரோயின், வில்லன் என சரமாரியாக கிண்டல் செய்கிறார்.

feat60-610x330

“பிள்ளையார் மாதிரி இருந்தீங்க… இப்ப பிள்ளையார் சதுர்த்தி கொளுக்கட்டை மாதிரி ஆயிட்டீங்களே” என அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றது.

“மேடம் உங்க கூகுளை கொஞ்சம் மூடுறீங்களா…”, “டேய்… உன் யூடியூப்பை மூடுறா” என இரட்டை அர்த்த வசனங்கள் வேறு இடம் பிடித்திருக்கின்றன.

இவர்களைத் தவிர சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி, உபேன் படேல், ஓஜாஸ், மிஸ்டர் இந்தியா காமராஜ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களை செய்துள்ளனர். படத்தில் ஏற்படும் திருப்பங்களுக்கு இவர்களே காரணமாகவும் உள்ளனர்.

ஒளிப்பதிவு மற்றும் திரைக்கதை

படம் தொடங்கி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் விக்ரமின் அப்பர் பாடியைத் தவிர வேறு எங்கும் கேமரா நகரவில்லை. ஆணழகன் போட்டியில் பங்கெடுப்பதாலோ என்னவோ வளைத்து வளைத்து அவரை காட்டியிருக்கிறார் பிசி ஸ்ரீராம்.

மெர்சலாயிட்டேன் பாடல் காட்சிகள், பாடிபில்டர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் ஆகியவை வடசென்னையைச் சுற்றியே நடப்பதால் வடசென்னையின் முக்கிய பகுதிகள், நடுத்தர வர்க்கத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் என கேமரா கண் இயல்பாக தான் காட்டியிருக்கின்றது.

ஆனால் … கதை நகர்ந்து சீனாவிற்கு சென்றவுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் கண்டு ரசிக்க பல பிரம்மாண்டமான இயற்கை அழகும், விக்ரம், எமி இடையிலான ‘கெமிஸ்ட்ரி’-யும் கண்களை குளிர்ச்சியடைய வைக்கின்றது.

‘லேடியோ’, ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’, ‘உன்னோடு நான் இருந்தால்’ போன்ற பாடல்களில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

amy-jackson

கதை…

ம்…. கதை …. தனக்கு கெடுதல் செய்தவர்களை ஒவ்வொருவராகப் பழிவாங்கும் கதாநாயகனின் கதை தான் என்றாலும் கூட திரைக்கதையில் செய்த சில மாற்றங்களும், பழிவாங்கும் விதமும், காட்சியமைப்புகளும் வேறுபடுத்திக் காட்டப்படுவதால் சற்று வித்தியாசமாகத் தெரிகின்றது.

அசல் வடசென்னையைச் சேர்ந்த இளைஞனாக விக்ரமை உருவாக்கி, அவர் கையில் நியூட்ரிசன் டப்பாக்களைக் கொடுத்து சென்னைத் தமிழிலேயே விளம்பர வசனம் பேச வைத்து, பின்னர் அவரையே லிங்கேஷ் டு மாடல் லீ ஆக மாற்றியமைத்து விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

விளம்பரங்களை வைத்தே கதை சொல்லிய விதமும், கதையில் பிளாஷ் பேக் போகும் ஒவ்வொரு காட்சிகளிலும் அதே விளம்பரங்களில் இருந்து தொடங்கியதும் அற்புதமான திரைக்கதை வடிவம்.

காட்சிகளுக்கு இடையிலான தொடர்பை வெட்டி ஒட்டியது போல் இல்லாமல் இடையில் தொலைக்காட்சியில் காட்சிகள் தெரிவது போல் இணைத்திருப்பது மிக நுணுக்கமான உத்தி.

படத்தில் என்ன குறை?

அன்பு, காதல், கவர்ச்சி, வில்லன்கள், சண்டைக்காட்சிகள், ஹீரோயிசம் என படத்தில் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவது போன்ற எண்ணம் ஏற்படுகின்றது.

அது என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில், மேற்சொன்ன எதிலும் அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லை.

இரண்டரை மணி நேரத்திற்குள் இவை அனைத்தையும் காட்சிகளில் கொண்டு வர வேண்டிய கட்டாய சூழ்நிலையாலோ என்னவோ ஷங்கர் எல்லாவற்றையும் மேலோட்டமாக சொல்லிவிட்டதாகவே தோன்றுகின்றது.

அவ்வளவு புகழ்பெற்ற மாடலான எமி ஜாக்சன், தடாலடியாக விக்ரம் மீது காதல் கொள்கிறார். அந்த காதல் குற்ற உணர்வால் வந்ததா?, பரிதாபப்பட்டு வந்ததா? அல்லது உண்மையில் விக்ரமின் குணம் பார்த்து வந்ததா? என்பதை சொல்ல அழுத்தமான காட்சிகள் இல்லை.

amy-jackson-i-movie-stills41383560748

இரண்டு மூன்று காட்சிகளிலேயே, விக்ரம் முற்றிலும் உருக்குலைந்து போய் விடுகிறார். அதனால் அவர் படும் துயரங்களை படம் பார்ப்பவர்கள் உணரும் அளவிற்குப் போதுமான காட்சிகள் இல்லை.

ஒவ்வொரு வில்லனாக தேடிப் போய் விக்ரம் வித்தியாசமான முறையில் பழி வாங்குகிறார். ஆனால் அதற்கு அவர் பயன்படுத்தும் விதம் அவருக்கும், இயக்குநருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் போலும்… ஒருவேளை அந்த முறைகளை சினிமா மூலமாக கற்றுக் கொடுத்துவிடக்கூடாது என்று நினைத்திருக்கலாம்.

இப்படியாக மக்களின் மனதில் நிற்கும் அளவிற்கு காட்சிகள் வைக்க, உணர்வுகளை வெளிப்படுத்த படத்தில் இடம் இருந்தாலும் அதை வைக்க ஷங்கர் தவறி விட்டார்.

படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தால், விக்ரமின் இறுகிய உடற்கட்டும், எமி ஜாக்சனின் அழகும், சீனாவின் வண்ணமயமான இயற்கை காட்சிகளும் மட்டுமே நம் மனதில் வந்து போகின்றது.

ஆனால் நிச்சயம் … ‘ஐ’ – பார்த்து ரசித்து மகிழ வேண்டிய ஒரு படம் என்பதில் ‘ஐ’யமில்லை.

‘ஜ’ – அழகு தான் என்றாலும், என்ன செய்வது ஒரு வருடமாக டீசர் முதல் டிரைலர் வரை கொடுத்த பில்டப்களில் நமது எதிர்பார்ப்புகளோ சென்றது ‘அதுக்கும் மேலே’!

-ஃபீனிக்ஸ்தாசன்