துபாய், ஜனவரி 19 – எதிர்வரும் 2017-ம் ஆண்டில் இந்தியா பொருளாதார ரீதியாக அசுர வளர்ச்சி அடையும். இதன் மூலமாக பொருளாதார நிலைகளில், சீனாவை முந்த இந்தியாவிற்கு வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மோடி அரசு மேற்கொள்ளும் சீர்திருத்தத் நடவடிக்கைகள் காரணமாக இருந்தாலும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, வளர்ந்த நாடுகளில் குறைந்துள்ள வட்டி விகிதம் போன்றவையும் அதற்கு சாதகமாக அமைந்துள்ளன.
இது தொடர்பாக உலக வங்கியின் ‘குளோபல் எகனாமிக் ப்ராஸ்பெக்ட்ஸ்’ (Global Economic Practice) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வரும் ஆண்டில் 6.4% அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுகிறது. 2017-ல் இந்த வளர்ச்சி 7% உயரும். அப்பொழுது சீனாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி 6.9 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
இதே கருத்தினை, பாங்காங்கில் செயல்படும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையமும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், பொருளாதார மதிப்பில் சீனா இந்தியாவை விட பல மடங்கு முன்னேறி உள்ளது. அதனை சமன் செய்ய இந்தியா, கடந்து செல்ல வேண்டிய பாதை இன்னும் அதிகமாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு:
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்பட்ட தொடர் சரிவும் இந்தியா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக உலக வங்கியின் தலைமை பொருளாதார அதிகாரி கவ்சிக் பாசு கூறுகையில், “கச்சா எண்ணெய் சரிவு, 2015-ம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என நான் நம்புகிறேன். இதனை கருத்தில் கொண்டு வளர்ந்த நாடுகள் தங்களது வட்டி விகிதத்தை உடனடியாக உயர்த்த மாட்டார்கள். எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளாகிய இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இது மிக சாதகமாக அமையும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா தனது உள்கட்டமைப்பு மற்றும் தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு இதுவே சரியான தருணமாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் வர்த்தகப் பெருக்கத்தை வைத்தே உலக நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.