Home உலகம் கடலில் விழுந்திருந்தால் எம்.எச்.370 நிச்சயம் கண்டுபிடிக்கப்படும்: ஆஸ்திரேலியா நம்பிக்கை

கடலில் விழுந்திருந்தால் எம்.எச்.370 நிச்சயம் கண்டுபிடிக்கப்படும்: ஆஸ்திரேலியா நம்பிக்கை

524
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 17 – மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 கடலில்தான் விழுந்துள்ளது எனில் அதை நிச்சயமாக கண்டுபிடிக்க முடியும் என ஆஸ்திரேலிய மீட்பு மற்றும் தேடுதல் குழுவின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடலில் விழுந்து 10 மாதங்களாகிவிட்டாலும் கூட அந்த விமானம் சிதையாமல் நல்ல நிலையிலேயே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

MH 370 Ships searching

#TamilSchoolmychoice

எம்எச் 370 விமானத்தைத் தேடும் வேட்டையில் ஈடுபட்ட மீட்புக் கப்பல்கள் (பழைய கோப்புப் படம்)

தற்போது இந்தியப் பெருங்கடலின் மிக ஆழமான பகுதிகளில் எம்.எச்.370 விமானத்தை தேடும் பணியில் 3 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. மேலும் ஒரு கப்பலும் இந்த தேடுதல் நடவடிக்கையில் விரைவில் இணைய உள்ளது.

மொத்தம் 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நான்கில் ஒரு பங்கு பகுதியில் தேடுதல் வேட்டை முடிந்துள்ளது.

“செயற்கைக் கோள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எந்தப் பகுதியில் விமானம் விழுந்ததாக கணித்துள்ளோமோ, அங்கு தீவிரமாக தேடி வருகிறோம். இக்குறிப்பிட்ட 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குள்தான் விமானம் இருக்க வேண்டும் எனக் கருதுகிறோம். விமானம் எந்த இடத்தில் உள்ளது என்பது துல்லியமாகத் தெரியவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட பகுதிக்குள்தான் விமானம் விழுந்துள்ளது எனில், நிச்சயமாக அதைக் கண்டுபிடித்துவிடுவோம்,” என்று ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை ஆணையர் மார்டின் லோடன் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இந்தத் தேடுதல் வேட்டை தொடங்கியதாகக் குறிப்பிட்ட அவர், மேலும் சில மாதங்கள் தேடுதல் பணி நீடிக்கும் என்றும், மே மாதத்திற்குள் இந்த நடவடிக்கை முடிவுக்கு வரும் என்றும் கூறினார்.

“ஒருவேளை மே மாதத்திற்குள் விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், தேடுதல் நடவடிக்கையை நீட்டிப்பது குறித்து ஆஸ்திரேலிய, மலேசிய அரசுகள் முடிவெடுக்கும். இந்த நடவடிக்கையில் வேகம் காட்ட முடியாது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும், சந்தேகங்களுக்கு இடமில்லாத வகையில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது,” என்று மார்டின் லோடன் மேலும் தெரிவித்துள்ளார்.