ஸ்காட்லாந்து, ஜனவரி 17 – மனிதர்களைவிட நாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்து செல்லக் குழந்தைகள் போல் வளர்க்கும் மனிதர்களும் உண்டு.
அதே நாயை கொடுமைப்படுத்தும் கொடூர மனப்போக்கு கொண்டு வில்லத்தனமான மனிதர்களும் உண்டு.
ஆனால், தான் ஆசையாய் வளர்த்த நாயை இரயில் நிலையத்தில் அதன் உரிமையாளர் அனாதையாக விட்டுச் சென்றதோடு, அதன் உடமைகளையும் ஒரு பெட்டியில் போட்டு அந்த நாயின் பக்கத்தில் வைத்து விட்டுச் சென்றிருக்கும் சோக சம்பவம் நடந்திருக்கின்றது.
அனாதையாக விடப்பட்ட கெய் என்ற நாய் இதுதான்….
ஸ்காட்லாந்தில் உள்ள இரயில் நிலையம் ஒன்றில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட தனது நாயை, அதன் உரிமையாளர் கைவிட்டுச் சென்றுள்ளார். அதனருகே அதன் உடைமைகள் அடங்கிய பெட்டியும் காணப்பட்டது. நாயை இரயில் நிலையத்தில் இருந்து ஒரு இரும்புக் கம்பியோடு உரிமையாளர் பிணைத்துக் கட்டிவிட்டு சென்றுள்ளார்.
கெய் (Kai) என்ற பெயருடைய அந்தச் செல்லப்பிராணி அயர் (Ayr) ரயில் நிலையத்தின் வெளியே காணப்பட்டது. அதற்கான பெட்டியில் ஒரு தலையணை, சில பொம்மைகள் மற்றும் நாய்கள் உணவருந்தும் குவளை ஆகியவை இருந்தன.
ஸ்காட்லாந்து போலிசார் அந்த நாயின் உரிமையாளர் யார்? எனக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு நாயை பராமரிக்காமல் கைவிடுவது ஸ்காட்லாந்து சட்டங்களின்படி குற்றமாகும்.
கடந்த 2013ஆம் ஆண்டு இணையதளம் ஒன்றின் வழி அந்த நாய் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் தற்போதைய உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை.
“அந்த செல்லப்பிராணியின் உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. அதை வைத்து அதன் பெயர் கெய் என்பதைக் கண்டறிந்தோம். மேலும் அதில் பதிவு செய்யப்பட்டிருந்த உரிமையாளரைத் தொடர்பு கொண்டபோது, கடந்த 2013லேயே கெய்யை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாகத் தெரிவித்தார். துரதிர்ஷ்டவசமாக கெய்யை வாங்கியவரின் முகவரி அவரிடம் இல்லை. இணையம் வழி செல்லப்பிராணிகளை விற்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு பிராணிகளைக் கைகழுவது கொடூர செயல். இதற்குக் காரணமானவரைத் தேடி வருகிறோம்,” என்று ஸ்காட்லாந்து காவல்துறை ஆய்வாளர் ஸ்டூவர்ட் டெய்லர் தெரிவித்துள்ளார்.
உரிமையாளரால் கைவிடப்பட்ட கெய்க்கு சுமார் 3 வயதிருக்கும் என்று கூறியுள்ள போலிசார் தற்போது அது கிளாஸ்கோவில் உள்ள சேவை மையம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையில் நாய் அனாதையாக விடப்பட்டது என்ற தகவலை பிரிட்டனின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த நாயை தத்தெடுக்க முன்வந்துள்ளனர். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து கூட அந்த நாயை தத்தெடுக்க ஆர்வம் காட்டி சிலர் அழைத்துள்ளனர்.