கொலம்பஸ், ஜனவரி 17 – பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான கொலம்பஸில் செயல்படும் அஞ்சல் அலுவலகம் ஒன்றில் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த இருவரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்த சம்பவம் பிரான்ஸ் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மர்ம நபருடன் காவல் துறையினர் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, அவன் சரணடைந்தான்.
அஞ்சல் அலுவலக சம்பவத்தைத் தொடர்ந்து எதிர்த் தாக்குல் நடத்துவதற்கும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கையில் இறங்கிய பிரான்ஸ் நாட்டின் அதிரடிப் படையினர்…
கடந்த வாரம் பாரிசில், சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் 12 பேர் பலியான இந்த சம்பவத்தின் பதற்றம் குறைவதற்கு முன்னர், அந்த நகரில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டன.
தீவிரவாத தாக்குதல் அபாயம் காரணமாக பிரான்ஸ் முழுவதும் அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட வந்த நிலையில், நேற்று கொலம்பஸில் தபால் நிலையத்துக்குள் மர்ம நபர் துப்பாக்கி முனையில் இருவரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்த சம்பவம் அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அஞ்சல் அலுவலகத்தை சுற்றி முற்றுகையிட்டிருக்கும் பிரான்ஸ் நாட்டின் அதிரடிப் படையினர்
எனினும், தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு காவல்துறையினரும், சிறப்பு தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, காவல் துறையினர் அந்த பகுதி முழுவதும், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் மர்ம நபருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், சில மணி நேரங்களுக்கு அவன் அதனை பொருட்படுத்த வில்லை. இறுதியாக அந்த நபர் தானாகவே முன்வந்து காவல் துறையினரிடம் சரண் அடைந்துள்ளான். அவனிடம் பிடிபட்ட இருவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
கொலம்பஸ் அஞ்சல் அலுவலக சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதால், பெரும்பாலான பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களும் அங்கு குவிந்து விட்டன. நிலவும் பதற்றமான சூழலை அவர்கள் உடனுக்குடன் ஒளிபரப்பியதால், பிரான்ஸ் மக்கள் மத்தியில் பரபரப்பும், பீதியும் நிலவியது.