கோலாலம்பூர், ஜனவரி 21 – இணையம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது கூகுள் தான். கூகுள் தனது இணைய வலையை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கான முன்னோட்டமாக பலூன்கள் மூலமாக இணைய சேவை (Project Loon), ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் இணைய சமிக்ஞை அனுப்புதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், கிராமப் பகுதிகளுக்கும் இணையச் சேவை வழங்குவதற்கு கூகுள் எடுத்த முயற்சிதான் சிறிய ரக செயற்கை கோள்கள் மூலம் ‘வைஃபை’ (Wifi) இணைப்புகளை வழங்குவது. இது தொடர்பான பல்வேறு ஆருடங்களை ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ பத்திரிக்கை பல முறை வெளியிட்டுள்ளது.
தற்போது அந்த ஆருடங்களுக்கு மகுடம் சேர்க்கும் விதமாக, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (Space Exploration Technologies Corporation) எனும் செயற்கைக் கோள் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய கூகுள் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் 700 சிறிய ரக செயற்கைக்கோள்களை பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தி அதன் மூலம் வைஃபை இணைப்புகளை வழங்க முடியும். இந்த திட்டம் முழு வேகத்துடன் செயல்பட்டால், பூமியில் நவீனத்துவத்திற்கு அப்பாற்பட்டு உள்ள கிராமங்களிலும் இணைய இணைப்புகளை வழங்க முடியும்.
இதே போன்ற திட்டத்தில் முதலீடு செய்ய முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.