தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படம் இளையராஜாவின் 1000–வது படம் ஆகும்.
இந்தியில் அமிதாப்பச்சன், தனுஷ், கமல் மகள் அக்ஷரா நடிக்கும் ‘ஷமிதாப்’ படத்துக்கும் தற்போது இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று இரவு மும்பையில் நடந்தது.
இந்த விழாவை 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக படக்குழுவினர் நடத்தினர். இதில் அமிதாப்பச்சன் பங்கேற்று இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
நடிகர்கள் ரஜினி, கமலஹாசன் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கினர். திரையுலகில் மூன்று ஜாம்பவான்களும் மேடைக்கு சென்று இளையராஜாவை பாராட்டியது கூட்டத்தினரை கரகோஷம் எழுப்ப வைத்தது.
முன்னாள் கனவு கன்னி ஸ்ரீதேவியும் இதில் பங்கேற்றார். ‘ஷமிதாப்’ படத்தில் இளையராஜா இசையில் அமிதாப்பச்சன் ஒரு பாடலை பாடியுள்ளார்.
அந்த பாடலை மேடையில் அவர் பாடினார். ஏற்கனவே ரஜினி, கமலும் நிறைய படங்களில் இளையராஜா இசையில் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், போனிகபூர் போன்றோரும் இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். தனுஷ், அக்ஷரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமிதாப்பச்சன் கூறும் போது, “இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த மேதை. ஒவ்வொரு படத்துக்கும் 5 பாடல்கள் என ஐந்தாயிரம் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார்”.
“அவற்றில் 3,500 பாடல்களுக்கு மேல் பிரபலமாகியுள்ளது. இளையராஜாவின் சாதனையை தொடுவது கடினமானது. இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வைத்து இருக்கிறார்” என்றார் அமிதாப்பச்சன்.