சென்னை, ஜனவரி 22 – விக்ரம் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன என்று திருநங்கைகள் கொதித்தெழுந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவுசெய்துவருகின்றனர்.
உண்மையில் இந்தியாவின் ஒப்பனையாளர் (மேக்கப் ஆர்டிஸ்ட்) பிரபல ‘ஓஜாஸ் ரஜனி’ தன்னுடைய சொந்த கதாப்பாத்திரத்திலேயே ‘ஐ’ படத்தில் நடித்துள்ளார்.
விக்ரமிற்கு ஒப்பனையாளர் ஓஸ்மா என்ற பெயரிலும், ஒரு கட்டத்தில் விக்ரமின் மீது காதல் கொள்ளும்படியும் அதை விக்ரம் உதாசினப்படுத்துவது போன்றும் காட்சிகள் என ஐ படம் நகரும்.
படத்தின் பின் பாதியில் முக்கிய வில்லன்களில் ஒருவராக மாறுவார் ஓஜாஸ். தற்போது கிளம்பியுள்ள போராட்டங்களுக்கும் , எதிர்ப்புகளுக்கும் ஓஜாஸ் தனது கடிதம் வாயிலாக பதில் அனுப்பியுள்ளார்.
அக்கடித்தத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இந்த படத்தினை பார்த்து யாரும் கோவப்படவேண்டாம். இயக்குநர் ஷங்கர் படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தினை அழகுடனும் நேர்த்தியுடனும் வடிவமைத்திருக்கிறார்”.
“என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற காதல் வயப்படுதல் அதனால் ஏற்படும் விளைவு மட்டுமே படத்தில் காட்டியிருக்கிறார். அது திருநங்கைகளை எந்த விதத்திலும் தவறாக காட்டப்படவில்லை.
‘ஐ’ சிறப்பாகவும், சிறந்த நட்சத்திரங்களைக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் வெளிநாட்டில் படபிடிப்பில் இருக்கிறேன். படம் நல்ல முறையில் ஓடிகொண்டிருக்கிறது”.
“யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் ஐ’ படத்தில் நடித்த திருநங்கை ஓஜாஸ்.