திரிபோலி, ஜனவரி 28 – லிபியாவின் தலைநகர் திரிபோலியில் அமைந்துள்ள கொரின்தியா நட்சத்திர விடுதியில் நேற்று ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வெளிநாட்டினர், 3 காவலாளிகள் மற்றும் ஒரு பிணைக் கைதி உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
பலியான 5 வெளிநாட்டினரின் அடையாளங்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அதில் இருவர் பெண்கள் என்ற தகவல் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
குண்டு துளைக்காத ஆடை அணிந்தவாறு விடுதியின் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு முன்பாக, வாகன நிறுத்துமிடத்தில் ஒரு குண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.
(வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட தங்கும்விடுதியின் கார் நிறுத்துமிடம்)
பிணையக் கைதியாகப் பிடித்துச் சென்றவரின் மேல் தங்களது தற்கொலை அங்கியின் குண்டை வெடிக்கச் செய்ததில், அவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
லிபியாவின் சைட் (SITE) எனும் உளவு அமைப்பின் தகவல் படி, சமீபத்தில் லிபியாவில் கொல்லப் பட்ட அல் கொய்தா போராளியான அபு அனஸ் அல் லிபியின் மரணத்துக்குப் பழி வாங்குவதற்காகவே, ஐஎஸ்ஐஎஸ் இத்தாக்குதலைத் நடத்தியுள்ளதாக நம்பப்படுகின்றது.