மும்பை, பிப்ரவரி 18 – பன்றிக் காய்ச்சலால் பலி எண்ணிக்கை இந்தியா முழுவதும் அச்சுறுத்திவருகிறது. இந்தியர்களை மட்டுமல்லாமல் பன்றிக்காய்ச்சல் வெளிநாட்டு பயணிகளையும் அச்சுறுத்திவருகிறது.
ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்துள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதன்காரணமாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து தொழில்துறைக்கு சுமார் ரூ.5,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை அமைப்பான, ‘அசோசெம்’ தெரிவித்துள்ளது.
பன்றிக் காய்ச்சலால் பலி எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த 12-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 485 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்ட்ராவிலும் உயிரிழப்பு அதிகம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை கொண்டுள்ள ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கும் குளிர்காலத்தில் மட்டும் சுமார் 2 முதல் 2.5 லட்சம் வரையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பன்றிக் காய்ச்சல் தான். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததன் மூலம் இரு மாநிலங்களுக்கும் சுற்றுலா, விமான போக்குவரத்து தொழில்துறைக்கு வரவேண்டிய சுமார் ரூ.5,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் குறிப்பிட்டுள்ளது.